×

கான்ட்ராக்டர் செய்யாத்துரை, நாகராஜ் வீடுகளில் தொடர் சோதனை 215 கோடி பணம், தங்கம், வைரம் சிக்கின

* 2 நகைக் கடைகளில் அதிரடி ரெய்டு
* விஐபிகள் தொடர்பு டைரி பறிமுதல்

சென்னை: நெடுஞ்சாலைத்துறை கான்ட்ராக்டர் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.179.9 கோடி மதிப்புள்ள ரொக்கம், 105 கிலோ தங்கம் மற்றும் 10 கோடி மதிப்புள்ள வைர நகைகள் உள்பட சுமார் 215 கோடி மதிப்புள்ள பொருள்கள் சிக்கின. பல நூறு கோடிக்கு சொத்து ஆவணங்கள், டைரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. டைரியில் முக்கிய விஐபிக்களைப் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு சத்துமாவு, பருப்பு, முட்டை ஆகியவற்றை சப்ளை செய்து வந்த கிறிஸ்டி புட்ஸ் என்ற நிறுவனம், சென்னையில் உள்ள அக்னி பில்டர்ஸ் ஆகிய நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதை வருமான வரித்துறை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து, கிறிஸ்டி புட்ஸ் உரிமையாளர் குமாரசாமி, அக்னி பில்டர்ஸ் உரிமையாளர் ஜெ.பி. என்கிற ஜெயப்பிரகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தமிழக அரசுக்கு நெருக்கமாக இருக்கும் கான்ட்ராக்டர்கள், விஐபிக்களின் முதலீடுகள் குறித்த பகீர் தகவல்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தன.

அதைத் தொடர்ந்து, தமிழக நெடுஞ்சாலைத்துறையில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.7,940 கோடிக்கு டெண்டர் எடுத்த எஸ்பிகே அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாத்துரை அவரது மகன்கள் நாகராஜ், கருப்பசாமி, ஈஸ்வரன், பாலசுப்பிரமணியம் ஆகியோரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், அரசின் டெண்டர் பணிகளை செய்யாத்துரையின் மகன் நாகராஜ்தான் கவனித்து வந்தார். இதனால் அவரது உறவினரான ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தீபக், சேத்துப்பட்டைச்
சேர்ந்த ஜோன்ஸ் ஆகியோரது வீடுகள், நொளம்பூரில் உள்ள துணை கான்ட்ராக்டர் வீடுகளில் நேற்று முன்தினம் காலையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டன.மேலும் சென்னை தி.நகரில் உள்ள நாகராஜ் வீடு, அருப்புக்கோட்டையில் உள்ள வீடு, கிரஷர், குவாரிகள், ஸ்பின்னிங் மில், மதுரையில் உள்ள ஓட்டல்கள் ஆகிய இடங்களில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் முதல் நாள் நடந்த சோதனையில் ரூ.163 ேகாடி ரொக்கம், 100 கிலோ தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று 2வது நாளாகவும் சோதனை நடத்தப்பட்டன. இந்தச் சோதனையில் மேலும் ரூ.16.9 கோடி ரொக்கம், 5 கிலோ தங்கம், வைர நகை குவியல்கள் சிக்கின. 2 நாட்கள் நடந்த சோதனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள வைர நகைகள் உள்பட சுமார் ரூ. 215 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட பணத்தை மிஷின்கள் உதவியுடன் இரவு, பகலாக கணக்கிடும் பணிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதோடு, நாகராஜின் அலுவலகத்தில் இருந்து டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில் முக்கிய விஐபிக்களின் பெயர்களை எழுதி வைத்துள்ளார். அதில் யார், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த தேதியில் கொடுக்கப்பட்டது. டெண்டர் கமிஷன் வழங்கப்பட்டது, பங்குதாரர்கள் குறித்த விவரங்களையும் அதில் நாகராஜ் விலாவரியாக எழுதி வைத்துள்ளார். குட்கா விற்பனையில் அமைச்சர், டிஜிபிக்கள் முதல் கீழ் மட்ட அதிகாரிகள் வரை சிக்கியதுபோல, இதிலும் டைரியில் முழுமையாக நாகராஜ் எழுதி வைத்துள்ளார். அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அதைத் தவிர அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் இருந்து ஹாட் டிஸ்க்குகள், பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன. அதிலும் கான்ட்ராக்ட் குறித்த ஏராளமான ஆவணங்கள், முறைகேடுகள் பற்றிய ஆதரங்கள் அதில் சிக்கியுள்ளன. அவற்றை எல்லாம் வருமான வரித்துறை அதிகாரிகள் மூட்டை, மூட்டையாக கட்டி தங்களது அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். நேற்று இரவு வரை பல இடங்களில் சோதனை முடியவில்லை. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் சோதனை முடிவுற்றது.

கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்குப் பிறகு சோதனைக்கு உள்ளான செய்யாத்துரை, நாகராஜ் மற்றும் தீபக், ஜோன்ஸ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் டைரியில் உள்ள தகவல்களை வைத்தும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த அதிரடி சோதனையில், இதுதான் பெரிய சோதனை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகைக்கடையில் சோதனை: சேத்துப்பட்டைச் சேர்ந்த ஜோன்ஸ் என்பவரது வீட்டில் இருந்து மட்டும் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நகைகள் அனைத்தும் சென்னை மயிலாப்பூர் லஸ்கார்னர் மற்றும் தி.நகரில் உள்ள ஒரே நகைக்கடையில் வாங்கியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் அந்த நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையிலும் செய்யாத்துரை, நாகராஜ் ஆகியோர் நகை வாங்கியதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கின. இது குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டு அறையை உடைத்து சோதனை


செய்யாதுரையின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முடிமன்னார் கோட்டை கிராமத்தில் உள்ள வீட்டிலும் நேற்று காலை 11 மணியளவில், 2வது நாளாக சோதனை நடந்தது. வீட்டில் ரகசிய அறை உள்ளதா எனவும் அதிகாரிகள் சோதனையிட்டனர். பின்னர் மாடிக்கு சென்ற அதிகாரிகள், அங்குள்ள அறையை உடைத்து சென்று சோதனையிட்டனர். இங்கும் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

வங்கி கணக்குகள் முடக்கம்


அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாதுரை வீட்டில், நேற்று முன்தினம் காலை முதல் இரவு 9.30 மணி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சிக்கிய ஆவணங்களை 4 வாகனங்களில் அள்ளிச் சென்றனர். நேற்று 2வது நாளாக காலை 9.40 மணியளவில் 30 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாதுரை வீடு மற்றும் அருகில் உள்ள அலுவலகங்களில் மீண்டும் அதிரடியாக சோதனை நடத்தினர். சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், செய்யாதுரை மற்றும் அவரது மகன்கள் பாலசுப்பிரமணி, கருப்பசாமி ஆகியோரிடம் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேலும், அருப்புக்கோட்டையில் 8க்கும் மேற்பட்ட வங்கிகளில் உள்ள எஸ்பிகே நிறுவன கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர், எஸ்பிகே நிறுவனத்துக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் எந்த பரிவர்த்தனையும் மேற்கொள்ளக்கூடாது என சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இந்த வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன.

ஆடிட்டர் சிக்கினார்

வருமானவரி சோதனையின்போது நகை மதிப்பீட்டாளர் ஒருவர் அழைக்கப்பட்டார். இவர் மூலம் சோதனையில் சிக்கிய பல கோடி மதிப்புள்ள நகைகளை அளவிடும் பணி நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், வீடு மற்றும் அலுவலகங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களிலும் பணம் இருக்கிறதா என சோதனை நடத்தினர். இந்த விசாரணை வளையத்தில் செய்யாதுரையின் ஆடிட்டர் ஒருவரும் சிக்கியுள்ளார். மதுரையை சேர்ந்த அவரிடமும் வருமானவரித்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையிலும் சோதனை

மதுரை கே.கே.நகர் வண்டியூர் பூங்கா ரோட்டில் செய்யாதுரையின் முன்றாவது மகன் ஈஸ்வரன் வீட்டிலும் நேற்று சோதனை நடந்தது. இதே பகுதியில் உள்ள இவர்களுக்கு சொந்தமான எஸ்.பி.கே சொகுசு விடுதியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர், நேற்று 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் செய்யாதுரைவின் மற்றொரு மகன் பாலசுப்பிரமணியனின் உத்தங்குடி - கப்பலூர் ரிங் ரோடு விரிவாக்க பணிக்கான அலுவலகம் திருமங்கலம் சம்பக்குளத்தில் உள்ளது. இங்கும், திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கல்குவாரியிலும் நேற்று 2வது நாளாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், மதுரை வீடு, அலுவலகத்திலும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கின. இந்த பணத்தை எண்ணும் பணி நேற்றிரவு வரை நடந்தது. இந்த 2வதுநாள் சோதனையில் மதுரையில் பல கோடி பணம், நகைகள் சிக்கி இருப்பதாகவும், செய்யாதுரையின் மகன்கள் ஈஸ்வரன், பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் இதுகுறித்த விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை சோதனையில் மேலும் இரு முக்கிய அமைச்சர்கள், தமிழக அரசின் உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மயிலாப்பூர் உதவியாளர் வீட்டில் 28 கோடி சிக்கியது


சென்னை மயிலாப்பூர் வீரப்பெருமாள் கோயில் தெருவில் கான்ட்ராக்டர் நாகராஜின் உதவியாளர் பூமிநாதன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.28 கோடி ரொக்கப்பணம் சிக்கியது. இந்தப் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியபோதுதான் பூமிநாதனுக்கே பெட்டிக்குள் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பூமிநாதன் சாதாரண வீட்டில்தான் வசித்து வந்தார். கீழ் வீட்டில் ஆட்டோ டிரைவர் வசிக்கிறார். இவர் 2வது தளத்தில் வசிக்கிறார். ஆரம்பத்தில் பாரிமுனையில் எழுது பொருள் விற்பனை கடை வைத்திருந்தார். அதன்பின்னர் கடையை மூடிவிட்டு, நாகராஜின் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பூமிநாதன் வீட்டில் சில ஆவணங்களை வைக்க வேண்டும் என்று கூறிதான் பெட்டிகளை நாகராஜன் அனுப்பியுள்ளார். தற்போதுதான் அது முழுவதும் பணம் என்று தெரியவந்தது.

அண்ணா மேம்பாலத்துக்கு கீழே 4 கோடி

அதேபோல அண்ணா மேம்பாலத்துக்கு கீழே நெடுஞ்சாலைத்துறைக்கென்று ஒரு சிறிய அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் ரூ.4 கோடியை நாகராஜ் பதுக்கி வைத்திருந்தார். இங்கு யாரும் பிடிக்க மாட்டார்கள். அருகில் அமெரிக்க தூதரகம் உள்ளது. எப்போதும் போலீசார் இருப்பார்கள் என்பதால், பணத்துக்கு முழு பாதுகாப்பு என்று கருதித்தான் ரூ.4 கோடியை இங்கு பதுக்கி வைத்துள்ளனர்.

அதேபோல சேத்துப்பட்டு ஜோன்ஸ் என்பவர் வீட்டுக்கு அருகில் உள்ள காரில் இருந்து ரூ.40 கோடியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பெசன்ட்நகரிலும் காரில் இருந்துதான் ரூ.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் நாகராஜ் தன்னிடம் இருந்த பணத்தை கார், கிணறு, மேம்பாலத்துக்கு கீழ் என்று பொதுமக்கள் நடமாடும் இடத்தில்தான் பதுக்கி வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதைப் பார்த்து வருமான வரித்துறை அதிகாரிகளே ஆடிப்போய்விட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு...