×

முத்ரா கடன் இலக்கை எட்டாத வங்கி மேலாளர்களுக்கு சம்பள உயர்வு ‘கட்’: மத்திய அமைச்சர் அதிரடி பரிந்துரை

புதுடெல்லி : முத்ரா கடன் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கடன் வழங்கல் இலக்கை எட்டாத வங்கி கிளை மேலாளரின் சம்பள உயர்வை நிறுத்த  வேண்டும் என்று, மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகிர், கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்  வளர்ச்சிக்காக நிதியுதவி வழங்க முத்ரா கடன் திட்டம் 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தொழில் முனைவோர் ரூ10 லட்சம் வரை  கடன் தொகை பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டுக்கு ரூ3 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதில் கடந்த 6ம் தேதி வரை48,000  கோடி ரூபாய் மட்டும் கடன் வழங்கப்பட்டுள்ளது. சில வங்கி கிளைகள் இலக்கை தாண்டி கடன் வழங்கினாலும், சில கிளைகள் இலக்கை எட்டவில்லை  என கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகிர் கடந்த 6ம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் சந்த்ராபூர் மாவட்ட  கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதில், முத்ரா உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தாவிட்டால்  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, முத்ரா திட்டத்தின் கீழ்   நிர்ணயிக்கப்பட்ட கடன் வழங்காமலும், போதுமான ஒத்துழைப்பு அளிக்காமல்  திட்டங்களை மோசமாக செயல்படுத்தும் வங்கி கிளை மேலாளர்களின்  ஆண்டு சம்பள  உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, அவர்களின் உயர் அதிகாரிகளுக்கு  பரிந்துரை அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  தனது தொகுதிக்கு உட்பட சந்த்ராபூர் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி முத்ரா திட்டத்தின் கீழ் பயிர்க்கடன்களை சரிவர வழங்கவில்லை என  கண்டறிந்த பிறகு இந்த பரிந்துரையை அவர் அனுப்பியுள்ளார். இதுகுறிோத்து கலெக்டர் அஷுதோஷ் சலீல் கூறுகையில், திட்டத்தை சரிவர  செயல்படுத்தாத வங்கி மேலாளர்களின் சம்பள உயர்வை நிறுத்தி வைக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஆனால், மத்திய அரசு திட்டங்களை சரிவர  செயல்படுத்த  தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உரிமம் ரத்து செய்யப்பட்ட பொருட்களை...