×

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதை எதிர்த்த வழக்கில் நோட்டீஸ்

சென்னை: மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கான அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும் மத்திய அரசும் 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க அரசு முடிவு செய்தது. இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அறிவிப்பாணையை எதிர்த்து வக்கீல் எஸ்.துரைசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்னிலையில்  நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் இளங்கோவன் ஆஜராகி, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி பெறவில்லை. கட்டிடப் பணிகள் 36 ஆயிரத்து 806 சதுர மீட்டர் பரப்பில் நடைபெறவுள்ளது. 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் கடலோர மண்டலப் பகுதியில் கட்டிடப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால் அதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். கடலோர மண்டல மேலாண்மை அமைப்பிடமும் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், தமிழக அரசு எந்த அனுமதியையும் பெறவில்லை. மேலும், புதிய கட்டிடப் பணிகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே உள்ள கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் துறையிடமிருந்து அனுமதி பெறவேண்டும். இந்த விதிமுறைகளையும் கடைபிடிக்க வில்லை என்று வாதிட்டார். அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, மொத்தமுள்ள 9.09 ஏக்கர் நிலப்பரப்பில் நினைவிடத்திற்கான கட்டிடம் 5571 சதுர மீட்டர் பரப்பிலேயே கட்டப்படவுள்ளது. எனவே, இதற்கு சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறத் தேவையிலை. சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் அனுமதி பெற்றால் போதும். விதிகளுக்கு உட்பட்டே நினைவிடம் அமைக்கப்படவுள்ளது என்று கூறி அதற்கான வரைபடம் மற்றும் கடலோர மண்டலம் தொடர்பான வரைபடம் ஆகியவற்றை நீதிபதிகளிடம் காட்டினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள்  2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...