×

நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 18ம் தேதி துவக்கம்: முக்கிய மசோதா நிறைவேற்ற முயற்சி

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் 18ம் தேதி தொடங்குகிறது.நாடாளுமன்ற விவகாரத்துக்கான அமைச்சரவை குழு கூட்டம், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நடத்துவதற்கான தேதி மற்றும் அதில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முக்கிய மசோதாக்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில், அடுத்த மாதம் 18ம் தேதி மழைக்கால கூட்டத் தொடரை தொடங்கவும், ஆகஸ்ட் 10ம் தேதி முடிக்கவும் முடிவு செய்யப்பட்டது.பின்னர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் கூறியதாவது: மழைக்கால கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே, அவையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பும் ஆதரவும் அளிக்க வேண்டும்.

இத்தொடரில் 6க்கும் மேற்பட்ட அவசர சட்டங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். முத்தலாக் தடை மசோதா, இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சட்ட அந்தஸ்து வழங்குதல், மருத்துவ கல்வி தேசிய ஆணைய மசோதா, திருநங்கைகள் மசோதா போன்ற முக்கிய மசோதாக்களும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். மக்களவையில் முத்தலாக் தடை மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது.  இப்போது, மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கிறது. இதை நிறைவேற்ற அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். இத்தொடரில் மொத்தம் 18 அமர்வுகள் நடக்கும்.  மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் முடிகிறது.  எனவே, புதிய துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் இந்த தொடரில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...