×

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி: தமிழிசை தகவல்

சென்னை: மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ளதாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரை அருகே உள்ள தோப்பூரில் 200 ஏக்கரில் ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ்  மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். மத்திய  அரசின் 2015-2016ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும்  தெரிவித்தார். இதற்காக தமிழகத்தில், மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 இடங்களில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்திருந்தது  குறிப்பிடத்தக்கது.

மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கை வசதிகளை கொண்டது என்றும் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்தும்,  உயர் தர சிகிச்சைக்கு, நோயாளிகளை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை  மாவட்டத்தை சுற்றியுள்ள, 18 மாவட்ட மக்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளா போன்ற தென் மாநில மக்கள் பயனடைவர். எய்ம்ஸ்  மருத்துவமனை மூலம் 100 எம்.பி.பி.எஸ்., மற்றும் 60 பி.எஸ்சி., நர்சிங் படிப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழசை பேட்டி:
சென்னை பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், எய்ம்ஸ்  மருத்துவமனை, காவிரி ஆணையம் அமைப்பு என பல நலத்திட்டங்களை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்து வருகிறது என்றும் சட்டத்தில் என்ன  இருக்கிறதோ, அதனையே அறிக்கையாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்தார். தமிழகத்தில் நக்சலைட்டுகள் கைது  செய்யப்பட்டது குறித்து அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வர  இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மக்களவை தேர்தலில் ஒப்புகைச்...