×

8 லட்சம் மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் ‘மகிழ்ச்சி பாடதிட்டம்’:ஜூலையில் டெல்லி அரசு துவக்குகிறது

புதுடெல்லி: அரசு பள்ளிகளில் பயிலும் 8 லட்சம் மாணவர்களுக்கு ‘மகிழ்ச்சி பாடதிட்டம்’ எனும் புதிய வகுப்பை டெல்லி அரசு அடுத்த மாதம் துவங்குகிறது.மாநில துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியாவின் கருத்தாக்கத்தில் உதித்த சிந்தனைதான் மகிழ்ச்சி பாடதிட்டம்.
தியானம், நீதி நெறிமுறை, மூளைக்கு பயிற்சி உள்ளிட்ட பன்முகத்திறமை கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கி மகிழ்விப்பது இந்த திட்டத்தின் அடிப்படி கொள்கையாகும். பிற்காலத்தில் பல்வேறு தொழில்களில் பணிபுரியும் போது ஆத்திரத்தில் புத்தியிழக்காமல், நிதானத்துடனும், பொறுமையாகவும், புன்சிரிப்புடனும் பிரச்னைகளை எதிர்கொண்டு சமுதாயத்திற்கு சிறப்பாக சேவை செய்யும் வகையில் இளம் பருவத்திலேயே மாணவர்களை உருவாக்குவது திட்டத்தின் முக்கிய நோக்கம்.மகிழ்ச்சி பாட திட்டம் வடிவமைப்பதற்கு 35 முதல் 40 வல்லுநர்கள் கொண்ட குழுவை சிசோடியா ஜனவரி மாதம் உருவாக்கி இருந்தார். அந்தக் குழுவினர் தயாரித்த பாடதிட்ட வரைவறிக்கைகள் பலநிலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வரைவு அறிக்கை வடிவத்தை எய்தியது.

அதையடுத்து சிசோடியா தலைமையில் நடைபெற்ற கல்வித் துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் இறுதி வரைவறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது குறித்து நிருபர்களுக்கு சிசோடியா கூறியதாவது: நர்சரி படிப்பு தொடங்கி 8ம் வகுப்பு வரை 1,000க்கும் அதிகமான அரசு பள்ளிகளில் படிக்கும் 8 லட்சம் மாணவர்கள் இந்த பாட திட்டத்தால் பலனடைவார்கள். திபெத்திய மத தலைவர் தலாய் லாமா ஜூலை 2ம் தேதி துவங்கி வைக்கும் இந்த மகிழ்ச்சி பாடதிட்டம், பள்ளிகளில் ஒரு பாடமாக மாணவர்களுக்கு உடனடியாக தொடங்கப்படும். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சென்றிருந்தபோது, அங்கும் மகிழ்ச்சி வகுப்புகள் நடைபெறுவதாக என்னிடம் தெரிவித்த அங்கிருந்த கல்வியாளர்கள், இருந்தும் 1,000 பள்ளிகள், 8 லட்சம் மாணவர்கள் என்ற மெகா அளவில் செயல்படுத்தவில்லை என மாநில அரசின் திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்தனர்.இவ்வாறு சிசோடியா கூறியுள்ளார்.

*  ‘மகிழ்ச்சி பாடத் திட்டத்தை’ தயாரிக்கும் பணி இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் 35 முதல் 40 வரையிலான கல்வியாளர்கள், நிபுணர்கள் ஈடுபட்டனர்.  

*  ஜூலை முதல் தலைநகரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர் இதனால் பயனடைவார்கள்.

*  டெல்லியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா ஜூலை 2ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...