×

ஸ்டெர்லைட் ஆலை இயங்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் அரசு ஒன்றும் செய்ய முடியாது: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அறிவிப்பு

பெருந்துறை:  ஸ்டெர்லைட் ஆலை இயங்க கோர்ட்டில் அனுமதி பெற்றால்  அரசால் ஒன்றும் செய்யமுடியாது என்று அமைச்சர் கருப்பணன் கூறினார்.ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கடந்த வாரம் சிப்காட் தொழிற்சாலைகளின் பாதிப்பு குறித்து பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  கருப்பணன் கலந்துரையாடினார். பின்னர் நேற்று சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்களை அழைத்து  பொதுமக்கள் புகார் குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.  பின்னர் அமைச்சர்  கருப்பணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிப்காட் பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் கூறிய புகார்களை சாய, தோல் ஆலைகள் 60 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் 18 வழிகளிலும் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்கப்படும். இதற்கு ஆகும் செலவினங்களை  தொழிற்சாலை உரிமையாளர்களே ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளனர். அது தவிர சிப்காட் பிரதான நுழைவு வாயிலில் போலீஸ் செக்போஸ்ட்  அமைக்கப்படும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்றம் அரசுக்கு மேலானதாக உள்ளது.  நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் அரசால் ஒன்றும் செய்யமுடியாது. சேலம் 8 வழிச்சாலையை பொதுமக்களோ, விவசாயிகளோ எதிர்க்கவில்லை.  சமூக ஆர்வலர் என்ற போர்வையில் சிறு, சிறு விவகாரங்களை கூட சிலர் பெரிதாக்குகின்றனர். இந்த சாலை அமையப்பெற்றால் சுங்கம் வசூலிப்பது குறித்து அரசுதான் முடிவெடுக்கும். சேலம் -சென்னை எட்டு வழி சாலைக்கு சுமார் 8 லட்சம்  மரங்கள் வெட்டப்படுவதாக கூறுகிறார்கள். நாங்கள் மரம் வெட்டினாலும் 65 லட்சம் மரம் நட்டுவிடுவோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ரயில் இருப்பு பாதை வழித்தடம்...