×

நாகை மீனவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தலையில் ஐஸ்கட்டி வைத்து சரமாரி தாக்குதல்: இலங்கை கடற்படையினர் அட்டகாசம்

வேதாரண்யம்: நாகை மீனவர்கள் தலையில் ஐஸ்கட்டிகளை வைத்து  சரமாரியாக தாக்குதல் நடத்தி இலங்கை கடற்படையினர் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் சசிக்குமார்(40). இவருக்கு சொந்தமான பைபர் படகில் சக்திநாதன், சக்திபாலன், கதிரவன், அருண்குமார் ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் மதியம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை அவர்கள் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இதுபோல ஆறுமுகம்(50) என்பவருக்கு சொந்தமான படகில் ஆறுமுகம், சிங்காரம், வேதையன், தங்கவேல் ஆகிய 4 பேர் நேற்று முன்தினம் இன்னொரு பைபர் படகில் கடலுக்கு சென்றனர். இரவு விடிய விடிய மீன் பிடித்து விட்டு 8 பேரும் நேற்று அதிகாலை கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். கோடியகரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் வந்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை படகு வேகமாக வந்து 2 பைபர் படகுகளையும் மடக்கி நிறுத்தியது. இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் படகுகளில் ஏறி அங்கு இருந்த ஐஸ்கட்டிகளை எடுத்து மீனவர்களின் தலையில் வைத்து அவர்களை உயர் அழுத்த மின்வயர்களால் சரமாரியாக அடித்தனர். இதில் 8 மீனவர்களுக்கும் ரத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் 2 படகுகளிலும் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்துவிட்டு இலங்கை படையினர் திரும்பி சென்று விட்டனர். மேலும் ₹10 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை எடுத்து சென்றனர். இதுகுறித்து 8 மீனவர்களும் செல்போன் மூலம் தங்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கரைக்கு வந்ததும் தான் நடந்த சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் தெரியவரும். மீன்பிடி தடைகாலம் முடிந்த ஒரு வாரத்தில் இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தால் மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ