×

டெல்லி ஆளுநர் கடிதம்: உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டார் முதலமைச்சர் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், கோபால் ராய் உள்ளிட்டோர் டெல்லி துணை நிலை ஆளநர் அனில் பாய்ஜல் இல்லத்தின் விருந்தினர் அறையில் 9 வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வேலை நிறுத்தத்தை கைவிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். பணிக்கும் அமைச்சர்கள் கூட்டத்திற்கும் வராத அதிகாரிகள் மீது அத்தியாவசிய சேவைகள் சட்டமான எஸ்மாவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், ரேசன் கார்டுகளை வீட்டுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் போன்ற முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டெல்லி ஆளுநர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தலைமைச்செயலகத்தில் அனைத்து அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார். இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு இடர்பாடு ஏற்படாத வகையில் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வேண்டும் என்று அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் கடிதம் எழுதியதை அடுத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மீண்டும் பணிகளை மேற்கொள்ள தொடங்கினர். டெல்லி துணை நிலை ஆளுநர் தலையீட்டின் பேரில் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை:...