×

பெருந்துறை அரசு பேருந்து பெயர் பலகையில் இந்தி எழுத்து எதிரொலி: நடத்துநர் சஸ்பெண்ட்

ஈரோடு: பெருந்துறையில் அரசு பேருந்தின் பெயர் பலகையில் இந்தி எழுத்து எழுதிய நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விதிமுறை மீறி செயல்பட்டதாக நடத்துநர் சீனிவாசனை போக்குவரத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். பிறகு அரசு நகர பேருந்தில் இந்தியில் எழுதப்பட்டிருந்த பேருந்தின் பெயர் பலகை தமிழில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடம் எண் (17), (12)-ல் இயங்கும் அரசு நகரப்பேருந்தில் பெயர் பலகை இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. இந்தப்பேருந்து சிப்காட் வழித்தடத்தில் செல்லும் போது மட்டும் தமிழில் இருந்த பெயர்ப்பலகை மாற்றப்பட்டு ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்ட பெயர்ப்பலகை பயன்படுத்தப்பட்டது.

இந்தியில் இருக்கும் பெயர் பலகையுடன் பேருந்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. ஏற்கனவே தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்த்தில் உள்ள பேருந்தில் இந்தியில் எப்படி பெயர்ப்பலகை வைக்கலாம் என பல்வேறு தரப்பிலும் கண்டன குரல்கள் எழுந்தன. எதிர்ப்பு குரல் அதிகரித்தால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்றி தமிழில் பெயர் பலகையை பொருத்தியுள்ளனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, பெருந்துறை சிப்காட் வளாக தொழிற்பேட்டையில் 1000-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் அப்பகுதியில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் குடியிருக்கின்றனர். பெருந்துறையில் நடக்கும் வாரச்சந்தைக்கு வந்து தான் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அவர்களுக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்ற காரணத்தினால் தான் இந்தியிலும், ஆங்கிலத்திலும் பெயர் பலகை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட வழித்தடத்தை தாண்டி அந்த பெயர்ப்பலகை எப்போதும் பயன்படுத்தப்பட்டதில்லை என்று தெரிவித்தனர்.
மேலும் குறிப்பிட்ட அந்த பெயர்ப்பலகை போக்குவரத்து கழகம் மூலம் கொடுக்கப்பட்டதில்லை என்றும் பலகை வைத்த நடத்துனர் சீனிவாசன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதோடு ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் மற்றும் கவுந்தப்பாடி பேருந்து நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மாநகரப் பேருந்துகள் நிற்காமல்...