×

போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட் ஆலையில் சேமித்த கந்தக அமிலம் அகற்றும் பணி துவக்கம்: 2 நாட்களில் முடியும் என கலெக்டர் பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கந்தக அமிலம் கசிந்ததால் நேற்று நிபுணர்கள் குழுவினர் அதனை  பத்திரமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை பெரும் போராட்டம், துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியைத் தொடர்ந்து கடந்த 28ம் தேதி மூடி  சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி மாலை ஆலை வளாகத்தில் உள்ள ஒரு கெமிக்கல் குடோனில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக கலெக்டர்  சந்தீப்நந்தூரிக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து அரசு உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொள்ள சப்-கலெக்டர் பிரஷாந்த் தலைமையில் நிபுணர்  குழு அமைத்து கலெக்டர் உத்தரவிட்டார். மாசுகட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் லிவிங்ஸ்டன், மாவட்ட துணை தீயணைப்பு அதிகாரி குமரேசன், தாசில்தார் சிவகாமசுந்தரி, டிஎஸ்பி  முத்தமிழ், தொழிற்சாலை ஆய்வாளர்கள் ராஜ்குமார், சரவணன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு  செய்தனர். ஆய்வில் கந்தக அமிலம் வைக்கப்பட்டுள்ள குடோனில் லேசான கசிவு இருப்பது தெரியவந்தது.

ஆலையில் மின்சார இணைப்பு இல்லாததால் இரவு கந்தக அமில கசிவை நிறுத்த இயலவில்லை. இதைதொடர்ந்து காலையில் கந்தக அமில கசிவை  நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அறிவித்தார். அதன்படி நேற்று காலை நிபுணர்கள் குழுவினர் மற்றும் அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்றனர். அவர்கள் அங்கிருந்து எவ்வாறு கந்தக  அமிலத்தை பாதுகாப்பாக வெளியேற்றுவது என திட்டமிட்டனர். தொடர்ந்து இதற்கென பிரத்யேகமாக ஜெனரேட்டர்கள், கிரேன்கள், டேங்கர் லாரிகள்  தயார் நிலையில் வைக்கப்பட்டன.மேலும் அங்கிருந்து அகற்றப்படும் கந்தக அமிலம் தேவைப்படும் தனியார் கம்பெனிகளுக்கும்  எஞ்சியவற்றை ஆலையின் வேறு குடோனுக்கு  மாற்றவும் திட்டமிடப்பட்டது. மதியத்திற்கு மேல் கந்தக அமிலத்தை அப்புறப்படுத்த அதற்குரிய டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு  ஜெனரேட்டர் உதவியுடன் கந்தக அமிலம் டேங்கர் லாரிகளில் ஏற்றப்பட்டு வருகிறது. இதையொட்டி ஸ்டெர்லைட் ஆலை முழுவதும் பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில்: பிற மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களுக்கு தேவையின் அடிப்படையில் இங்குள்ள கந்தக  அமிலம் பிரத்யேக டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்படும். இதற்கான நிறுவனங்களை ஸ்டெர்லைட் நிறுவனம் முடிவு செய்யும்.

 சுமார் 1000 மெட்ரிக் டன்களுக்கும் மேலாக கந்தக அமிலம் உள்ளதால் இப்பணி முடிய இரு நாட்கள் ஆகும். ஆலையில் இருந்து பாதுகாப்பாக  அமிலத்தை கொண்டு செல்வதுதான் முக்கிய பணி. கோர்ட் உத்தரவுப்படி தூத்துக்குடி வளர்ச்சிப்பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை ரூ.100 கோடி  செலுத்தியுள்ளது. இந்த இருப்பு பணத்திற்கு வட்டி ரூ.40 கோடி முதல் ரூ.45 கோடி வரை  கிடைத்துள்ளது. இதில் சுமார் ரூ.25 கோடி வளர்ச்சி திட்ட  பணிகளுக்கு செலவிடப்பட்டு பணி முடியும் நிலையில் உள்ளது.
 தூத்துக்குடி வன்முறை சம்பவத்தில் யாரும் வீடு புகுந்து கைது செய்யப்படவில்லை. தொடர்பின் அடிப்படையில் மட்டுமே கைது  நடக்கிறது என்றார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற...