×

புதிய மின்நிலையங்களில் பொறியாளர்களை நியமிக்காததால் மின்விநியோகம் உள்ளிட்ட பணிகளில் தேக்கம்

சென்னை: புதிய துணை மின்நிலையங்களில் பொறியாளர்கள் நியமிக்க கோரி அதிகாரிகள் அனுப்பிய கடிதம் கடந்த ஒரு மாதமாக ெசன்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தூங்கி வழிகிறது. தமிழக மின்வாரியத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். எனினும்  மின்வாரியத்தில் தற்போதும் 47 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. குறிப்பாக ஹெல்பர்கள், வயர்ேமன்கள் உள்ளிட்ட களப்பணியாளர் இடங்கள் 20 ஆயிரத்துக்கும் மேல் காலியாக உள்ளன. இதனால் அடிப்படை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதுடன், தொழிலாளர்களுக்கு பணிச்சுமை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், காலியிடங்களை நிரப்பாமல் புதிய, புதிய திட்டங்களை அரசு அறிவிப்பதனால் ஊழியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் புதிய 45 துணை மின்நிலையங்கள் தொடங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

துணை மின் நிலையங்களை பொறுத்தவரை, ஜூனியர் பொறியாளர்கள் தான் ஷிப்ட் அடிப்படையில் ஆப்ரேட்டர்களாக பணிபுரிவார்கள். அதன்படி, நாள் ஒன்றுக்கு மொத்தம் 4 ஷிப்ட்டிற்கு 4 ஜூனியர் பொறியாளர்கள் தேவைப்படும். முதல்வரால் அறிவிக்கப்பட்ட 45 துணை மின்நிலையங்களில் பெரும்பாலானவை பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால் இதுவரை அதற்கான ஜூனியர் பொறியாளர்கள் உள்பட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் அருகில் உள்ள பிற துணை மின்நிலைய ஊழியர்களை வைத்து அதிகாரிகள் சமாளிக்கின்றனர். புதிய துணை மின் நிலையங்களுக்கு ஜூனியர் பொறியாளர்களை நியமிக்கும்படி அந்தந்த மாவட்ட கண்காணிப்பு பொறியாளர்கள் மூலம், மின்வாரிய சேர்மன் விக்ரம்கபூருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் ஒரு மாதமாகியும் அந்த கடிதம் மீது சேர்மன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: புதிய துணை மின்நிலையங்களுக்கு பொறியாளர்கள் நியமிப்பது தொடர்பான ஆவணத்தை சேர்மன் மாதக்கணக்கில் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இதேபோல், பதவி உயர்வு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவது உள்ளிட்ட பல ஆவணங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இந்த நிலை தொடர்ந்தால் வாரியத்தின் முக்கிய பணிகள் பாதிக்கப்படும் சூழல் நிலவும். எனவே, பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான ஆவணம் குறித்து சேர்மன் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆவணம் தேக்கம் அடைய என்ன காரணம்?

மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், மின்வாரியத்தில் கூடுதலாக ஒரு ஐஏஎஸ் அதிகாரி இணை நிர்வாக இயக்குனராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். ஆனாலும் முக்கிய கோப்புகளில் சேர்மன் தான் கையெழுத்திட வேண்டும். எனவே வேறு எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவரை சேர்மனாக நியமித்தால் தான் வாரியத்தில் தேங்கி கிடக்கும் கோப்புகள் வேகமெடுக்கும்’’ என்றார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...