×

நேரடி வரியை எடுத்துக் கொண்டு மறைமுக வரி வருவாயை மாநிலங்களுக்கு கொடுங்கள்: மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை ‘

‘நேரடி வரி வருவாயை மத்திய அரசு எடுத்துக் கொண்டு, மறைமுக வரியை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்’’ என்று நிதி ஆயோக் கூட்டத்தில்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, மாநிலங்கள் வருவாயை பெருக்குவதற்கான வழிகள் மிகவும் குறைந்து விட்டன. தற்போதைய வளர்ச்சி  சவால்களை சந்திக்க, வருவாயை பகிர்ந்து கொள்வதில் புதிய முறைகளை கொண்டு வருவது பற்றி நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது. வளர்ந்த  நாடுகளில் பின்பற்றப்படுவதுபோல, நேரடி வருவாயை மத்திய அரசு வைத்துக் கொள்ளலாம், மறைமுக வரிகளை மாநிலங்களுக்கு அளிக்கலாம்.  தனிநபர் வருமான வரியை வசூலிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு அளித்தால், அந்த நிதியை மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்த  பயன்படுத்தி கொள்ள முடியும். இதன்மூலம், தற்போதைய சிக்கலான நிதி பங்கீட்டை எளிதாக்க முடியும். நிதி ஆதாரங்களை திரட்டும் அதிகாரம்  மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு குறைவாக உள்ளது. இதை பிரதமரை தவிர, மத்திய அரசில் வேறு யாராலும் சிறப்பாக புரிந்து கொள்ள  முடியாது. நிதியை பகிர்ந்தளிப்பதில் அடுத்தடுத்து வந்த நிதி கமிஷன்கள் தமிழகத்தை வஞ்சித்துள்ளன. மாநிலங்களுக்கான நிதி பங்களிப்பை 14வது  நிதி் கமிஷன் 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தியது.

 ஆனால், மொத்த தொகையில் இருந்து தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய பங்கை 4.969  சதவீதத்திலிருந்து 4.023 சதவீதமாக குறைந்து விட்டது. இதனால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு.  15வது நிதி கமிஷனில் உள்ள  சில விதிமுறைகள்,  நமது அரசியல் சாசனத்தில் உள்ள கூட்டாட்சி விதிமுறைகளுடன் ஒத்துப் போகவில்லை. எனவே, அவற்றை மாற்றியமைப்பது  பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். 15வது நிதி கமிஷனில், 1976ம் ஆண்டு மக்கள் தொகைப்படி வரி வருவாயை ஒதுக்கீடு செய்வதற்கு  பதில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டங்களை வலுவாக அமல்படுத்திய  தமிழகத்தை இந்த விதிமுறை பாதிப்பதாக உள்ளது.  காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்தபடி,  காவிரி நீர்  மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை  இணைத்து தேசியமயமாக்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அப்போதுதான் மாநிலங்களுக்கு இடையே நீர் ஆதாரங்களை  உரிய அளவில் பயன்படுத்த முடியும்.
மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு-பாலாறு-காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்தவும்,  பம்பை-அச்சன்கோவில் நதிகளின் கூடுதல் நீரை தமிழகத்தின் வைப்பாறுக்கு திருப்பிடவும் மத்திய அரசை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து  வலியுறுத்தி வந்தார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க...