×

அமைதியை விரும்பினால் காஷ்மீருக்கு தீவிரவாதிகள் அனுப்புவதை நிறுத்துங்கள்: பாகிஸ்தானுக்கு இந்திய தளபதி அறிவுரை

பஹல்காம்: ‘‘பாகிஸ்தான் அமைதியை விரும்பினால், காஷ்மீருக்கு தீவிரவாதிகளை அனுப்புவதை நிறுத்த வேண்டும்’’ என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். ‘காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பாதுகாப்பு படையினர் எந்தவித தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டார்கள். ஆனால், ஏதாவது தாக்குதல் நடந்தால் பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினருக்கு உரிமை உள்ளது’ என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 16ம் தேதி அறிவித்தது. அதன்படி, கடந்த சில நாட்களாக பாதுகாப்பு படையினர் எந்தவித தேடுதல் வேட்டையையும் நடத்தவில்லை. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 ராணுவ பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக ராணுவ தளபதி பிபின் ராவத் காஷ்மீர் வந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அமைதியின் பயனை மக்கள் உணர வேண்டும் என்பதற்காகத்தான், காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு அமைதி நிலவுவது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு அமைதி நிலை தொடர்ந்தால், ராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கை நிறுத்தத்தையும் தொடர்வது குறித்து நாங்கள் பரிசீலிப்போம்.

பாகிஸ்தான் உண்மையிலேயே அமைதியை விரும்பினால், தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து ஜம்மு காஷ்மீர் அனுப்புவதை நிறுத்த வேண்டும். தீவிரவாத ஊடுருவல்களால்தான் எல்லையில் அத்துமீறிய தாக்குதல் நடக்கிறது. இதனால் உயிரிழப்பும், பொருட்சேதமும் ஏற்படுகிறது. பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தினால், நாங்களும் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும். எல்லையில் அமைதி நிலவ, ஊடுருவல் முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ராணுவ அதிகாரிக்கு கடும் தண்டனை அளிக்கப்படும்
காஷ்மீரில் பணியாற்றும் ராணுவ மேஜர் லீதுல் கோகாய் மற்றும் அவரது டிரைவர் ஆகியோர் சமீபத்தில் 18 வயது இளம்பெண் ஒருவருடன் நகரில் உள்ள விடுதிக்கு சென்றனர். விடுதி ஒதுக்க மறுத்த போது ஏற்பட்ட தகராறில் லீதுல் கோகாயை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணை விபசாரத்துக்கு அழைத்து சென்றது தெரிந்தது. இதையடுத்து, கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த பிபின் ராவத், ‘‘ராணுவ அதிகாரி ஒருவர் ஏதாவது ஒரு குற்றத்தில் ஈடுபட்டது நிருபிக்கப்பட்டால், அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும்’’ என்றார். சர்ச்சையில் சிக்கிய லீதுல் கோகாய்தான், கடந்தாண்டு காஷ்மீர் இளைஞர் ஒருவரை ராணுவ ஜீப்பில் கட்டி வைத்து ரோந்து செல்ல உத்தரவிட்டவர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...