×

துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று எடப்பாடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின் ஆவேச பேட்டி

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று எடப்பாடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் இரண்டு திருமணங்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சோத்துப்பாக்கம், அச்சிறுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடத்தி வைத்தார். தொடர்ந்து திமுக செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினருடன் பஜார் வீதிக்கு வந்தார். அங்கு ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் 13 பேரை சுட்டுக் கொன்ற தமிழக அரசு ராஜினாமா செய்யவேண்டும்’ என்று  வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை கைது செய்த போலீசார் அவர் திருமணத்தை நடத்தி வைத்த அச்சிறுப்பாக்கம் மோகன மஹாலுக்கு அழைத்து வந்து தங்க வைத்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று போராட்டம் நடந்தது. அதில் 100வது நாள் நடந்த உச்சக்கட்ட போராட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமி அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் திமுக உள்ளிட்ட 9 கட்சிகளின் முடிவின்படி தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதில் நூறு சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த போராட்டத்தை வெற்றியடையச் செய்த ஒட்டுமொத்த பொதுமக்கள், வணிகர்கள், மாணவர் அமைப்பு, அனைத்து கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போராட்டம் இன்றுடன் முடியப்போகிற போராட்டம் அல்ல. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் வரை போராட்டங்கள் தொடரும். தூத்துக்குடியில் 13 பேர் பலியானதை தொடர்ந்து எடப்பாடி அரசு, காவல் துறை தலைவர் டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வேண்டும்.

டிவி பார்த்துதான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தெரிந்து கொண்டேன் என்று முதல்வர் கூறுவது பொறுப்பற்ற நிலையில் உள்ளது. பொறுப்பற்ற நிலையில்தான் ஆட்சி நடக்கிறது. கமிஷன், கரப்ஷன் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மாமூல், கமிஷன் என்ற நிலையில் இந்த எடப்பாடி அரசு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. அப்படி இல்லையென்றால், இன்றோ நாளையோ அமைச்சரவையைக் கூட்டி ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். செயலற்ற கையாலாகாத இந்த அரசு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் 9 கட்சிகள் கூடி மீண்டும் மீண்டும் போராட்டம் நடத்துவோம். மேலும் தமிழகத்தில் 14 பேர் இறந்ததற்கு பிரதமர் நரேந்திரமோடி அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. எனவே, அவருக்கும் கமிஷன் போவதாக கூறப்படும் தகவல்கள் உண்மைதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...