×

நாள்தோறும் உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை: விரைவில் உரிய தீர்வு காண அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார். கர்நாடக தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை ஒப்புக்கொண்டுள்ள பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒபெக் நாடுகள் உற்பத்தியை குறைத்ததால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாக கூறினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காணும் என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை அரசு உணர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே விலை உயர்வுக்கு காரணம். ஓபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துவிட்டன. அமெரிக்கா - ஈரான் மோதல் போக்கு, வெனிசுலா விவகாரம் போன்றவற்றால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சர்வதேச நிலவரங்களைக் கவனமாக ஆராய்ந்து, சாமான்ய மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே தொடர்ந்து 8வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து ரூ.79.47 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்து ரூ.71.59 காசுகளுக்கும் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மேலும் 4 ரூபாய் அளவுக்கு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தபோதெல்லாம் விலையை குறைக்காத மத்திய அரசு சுங்க வரியை அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 2ம் கட்ட மக்களவை தேர்தல்: அதிக...