சேலம்: தமிழகம் முழுவதும் பதநீர் அதிகளவில் கிடைப்பதால், பனை வெல்லம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் விலை சரிந்துள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, திருச்செந்தூர் வட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம், சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் மற்றும் ஜலகண்டாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் பனைமரங்கள் அதிகளவில் உள்ளன. பனை மரங்களில் கிடைக்கும் பதநீர் மூலம் பனைவெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். நடப்பாண்டு அனைத்து பகுதிகளிலும் எதிர்பார்த்த அளவில் பதநீர் கிடைத்துள்ளது. இதனால், பனை வெல்லம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரு மாதமாக பனைவெல்லம் விலை சரிந்துள்ளது. கடந்த ஜனவரியில் ரூ.200 முதல் ரூ.220 வரையிலும் விற்ற ஒரு கிலோ பனைவெல்லம், தற்போது ரூ.140 முதல் ரூ.180 என விலை சரிந்துள்ளது.
