×

நிர்மலாதேவி விவகாரத்தில் பேராசிரியர்கள் பலிகடா சந்தானம் குழுவால் கவர்னரை விசாரிக்க முடியுமா?: பல்கலை. பாதுகாப்பு கூட்டமைப்பு கேள்வி

மதுரை:  பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சந்தானம் குழுவால் கவர்னரை விசாரிக்க முடியுமா? என மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரையில் காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது. பின்னர் கூட்டமைப்பின் தலைவர் சீனிவாசன், செயலாளர் முரளி ஆகியோர் அளித்த பேட்டி: கவர்னரால் நியமிக்கப்பட்ட சந்தானம் குழு விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவரிடம் நாங்கள் அளிக்கும் புகாரால் எந்த பயனும் இருக்காது. இந்த குழுவானது கவர்னர், பல்கலை துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோருக்கு ஆதரவாக செயல்படும் நிலைதான் உள்ளது. எனவே, கவர்னர் நியமித்த இந்த விசாரணை ஆணையத்தை திரும்ப பெற வேண்டும். நிர்மலாதேவி தொடர்பான விசாரணை ஆணையத்தை நியமிக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை.

இந்த ஆணையத்தால், இவ்விவகாரத்தில் தொடர்புள்ளதாக கூறப்படும் கவர்னரை விசாரிக்க முடியுமா?. விசாரணை முடியும்வரை கவர்னரும், துணைவேந்தரும் ஒதுங்கி இருக்க வேண்டும். நிர்மலாதேவி விவகாரத்தில் முருகன், கருப்பசாமி இருவரையும் பலிகடா ஆக்கி பலர் தப்பிக்க முயற்சி நடக்கிறது. அது மட்டுமல்லாது பல்கலை. நியமனங்களில் பல முறைகேடு நடைபெற்றுள்ளது சிபிசிஐடி விசாரணையை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் நடத்த வேண்டும். எனவே, சமூகத்தின் மீது அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரிபரந்தாமன் மற்றும் நேர்மையான கல்வியாளர்களைக் கொண்டு விசாரணைக்குழுவை தனியாக அமைக்க வேண்டும்.

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்களை துணைவேந்தர் அச்சுறுத்தி வருகிறார். இருவர் பணி மாற்றப்பட்டுள்ளனர். தேர்வாணையர், துணை தேர்வாணையர், துணைவேந்தர் மூவர் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இவர்கள் பதவியில் இருப்பது சட்ட விரோதம். அதேபோல், பல்கலை மானியக்குழு விதி மீறப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் விசாரித்தால்தான் பல உண்மைகள் வெளிவரும். பல நிர்மலாதேவிகள் சிக்குவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...