×

கொலீஜியத்தில் உள்ள நீதிபதிகளின் கருத்தை துணை ஜனாதிபதி கேட்டிருக்க வேண்டும்: கபில் சிபல் கருத்து

புதுடெல்லி: தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை நிராகரிப்பதற்கு முன்பு கொலீஜியத்தில் உள்ள நீதிபதிகளின் கருத்தை துணை குடியரசுத் தலைவர் கேட்டிருக்க வேண்டும் என கபில் சிபல் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைத் தகுதிநீக்கம் செய்யும் கண்டனத் தீர்மானத்தை நிராகரித்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  வக்கீலான   கபில் சிபல். காங்கிரஸ் கட்சியினை  சேர்ந்த  குலாம்நபி ஆசாத் தலைமையில்  எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கடந்த 20ம் தேதியன்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்தனர் .

அப்போது   சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைத் தகுதிநீக்கம் செய்வது குறித்த மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி வகித்துவரும் 64 பேரின் கையெழுத்து அடங்கிய கண்டனத் தீர்மானத்தை, வெங்கையா நாயுடுவிடம் அளித்தனர். இந்தக் கண்டனத் தீர்மானம் குறித்து, நேற்று முன்தினம் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார் வெங்கையா நாயுடு. இந்த நிலையில், நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான கண்டனத் தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்தார். வெங்கையா நாயுடுவின் இந்த முடிவிற்கு  ஆட்பேசனை  தெரிவித்த கபில் சிபில்  டெல்லியில் நிருபர்களை  சந்தித்து கூறியதாவது:

இந்தக் கண்டனத் தீர்மானம் வெங்கையா நாயுடுவினால் அவசரமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. 64 பேரின் கையெழுத்தோடு ஒரு கண்டனத் தீர்மானம் அளிக்கப்பட்டால், அதைப் படித்துப் புரிந்துகொள்வதற்கே காலம் தேவைப்படும். இம்மாதிரியான விவகாரங்களில் இவ்வளவு அவசரமாக முடிவெடுக்க வேண்டாம். இந்திய வரலாற்றில் எந்தவொரு கண்டனத் தீர்மானமும், இதைப் போன்று ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டதில்லை. இதை நிராகரிப்பதற்கு முன்பாக, கொலீஜியத்தில் உள்ள நீதிபதிகளின் கருத்தை துணை குடியரசுத் தலைவர் கேட்டிருக்க வேண்டும். வெங்கையா நாயுடுவின் நிராகரிப்பு மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக உள்ளது. சட்டபூர்வமான நடவடிக்கைகளை அழிப்பதாக உள்ளது. இதுகுறித்த முழுமையான விசாரணைக்குப் பின்னரே இப்படியோர் அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்க வேண்டும். தலைமை நீதிபதி மீதான கண்டனத் தீர்மானத்தைக் கொண்டுவருவது உரிமை.

கண்டிப்பாக, துணை குடியரசுத் தலைவரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வோம். இந்த மனுவை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பது உட்பட எந்த முடிவிலும் தலைமை நீதிபதி தலையிடக் கூடாது என விரும்புகிறோம். உச்ச நீதிமன்றம் இதுகுறித்து என்ன முடிவெடுத்தாலும், அதை ஏற்கத் தயாராக இருக்கிறோம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். கபில் சிபிலின்  இந்த பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவினர்,’கடந்த  1993ம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த வி.ராமசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அப்போது அவர் மீது  எதிர்க்கட்சிகள் கண்டனத் தீர்மானம் கொண்டுவந்தபோது, காங்கிரஸ் கட்சி அதை ஏற்கவில்லை. இதனால் அந்தத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. அந்த நேரத்தில்  சம்பந்தப்பட்ட நீதிபதியான ராமசாமியை   கபில் சிபல்  ஆதரித்தது ஏன்?  என கேள்வி எழுப்பியுள்ளனர்.
 இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டு  வேறு, வழக்குகளில் நீதி பரிபாலனங்களில்   தலையீடு வேறு. இரண்டையும் வேறு விதமாக பார்க்க வேண்டும். காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமிடையிலான அரசியல் தாக்கத்தையும் தாண்டி   நீதிபதி லோயாவின் மரணம் குறித்த விசாரணை அளவற்ற முக்கியத்துவம் கொண்டதாகும். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. பாஜக தலைவர் அமித் ஷாவின் சந்தேகத்துக்குரிய பாத்திரம் மற்றும் இந்த வழக்கில் காலப்போக்கில் எழுந்துள்ள முறைகேடுகள் முக்கியமானவை என  மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில் துணைத் தலைவர் பல்வந்த் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ