×

கேரள டிவி நடிகை மர்ம சாவு வீட்டில் கருகி கிடந்தார்

திருவனந்தபுரம்: கேரளாவில் மலையாள டிவி நடிகை வீட்டில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பிஜேஷ். இவரது மனைவி கவிதா (37). இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகள் உண்டு. கவிதா ஏராளமான மலையாள டிவி குறும்படங்களில் நடித்துள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 2 வருடங்களாக கவிதா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதையடுத்து நிலம்பூரில் ஒரு வாடகை வீட்டில் கவிதா தனது மகளுடன் வசித்து வந்தார்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மகளை, உறவினர்கள் அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். கவிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கவிதாவின் வீட்டு சமையல் அறையில் இருந்து அதிக அளவில் புகை வந்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நிலம்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கவிதா சமையல் அறையில் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் மின்சார ஒயரும் சுற்றப்பட்டு இருந்தது.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கவிதா பெங்களூரில் அழகு நிலையம் தொடங்க திட்டமிட்டுள்ளார். அதற்கான பணத்தை திரட்ட முடியாமல் தவித்துள்ளதும், இதனால் மன வேதனையில் இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது.அழகு நிலையம் வைக்க பணம் திரட்ட முடியாத மனவேதனையில் கவிதா தற்கொலை செய்து இருக்கலாம் என்று அவரது தந்தை விஜயன் தெரிவித்துள்ளார். இருப்பினும் கவிதாவின் உடலில் பெட்ரோல் வாசம் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் பெட்ரோல் ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.கவிதாவுக்கு வேறு யாருடனாவது முன்விரோதம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...