×

பராசக்தி பட விவகாரம்; சூர்யாவிடம் வாங்கிய சம்பளத்தை மறைத்து பொய் வழக்கு போட்டாரா சுதா கொங்கரா? பரபரப்பு தகவல்கள்

சென்னை: ‘பராசக்தி’ படத்தை இயக்கியதற்காக தனது சம்பளத்தில் ரூ.8.39 கோடி பாக்கி இருப்பதாகவும், அதை டான் பிக்சர்ஸ் தர வேண்டியுள்ளது என்றும் இயக்குனர் சுதா கொங்கரா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் அதுவரை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து, இயக்கியுள்ள ‘இதயம் முரளி’ படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது. இந்த விவகாரத்துக்கு பின்னணியில் இருக்கும் உண்மையை பற்றிய விவரம்:

‘பராசக்தி’ திரைப்படத்தை முதலில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்காக இயக்க சுதா கொங்கரா 2021ல் ஒப்பந்தம் செய்திருந்தார். அதில் சூர்யா ஹீரோவாக நடிக்க இருந்தார். அந்த நிறுவனத்திடம் இருந்து கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்திற்காக ரூ.4.12 கோடியை அவர் முன்பே பெற்றுள்ளார். பின்னர் 2024 டிசம்பரில் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. சூர்யா அப்படத்திலிருந்து விலகினார். பிறகு, டான் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.5.8 கோடி கொடுத்து அந்தப் படத்தின் உரிமைகளை வாங்கியது.

ஆனால், தான் ஏற்கனவே 2டி நிறுவனத்திடம் இருந்து ரூ.4.12 கோடி பெற்ற விவரத்தை சுதா கொங்கரா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவில் திட்டமிட்டே மறைத்துவிட்டார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சுதா கொங்கராவுக்கு ரூ.8.5 கோடியை (ஜிஎஸ்டி தவிர்த்து) சம்பளமாக வழங்கிவிட்டது. எனவே 2டி நிறுவனத்திடம் இருந்து அவர் பெற்ற ரூ.4.12 கோடியையும் இதனுடன் சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்றும், இதனால் சுதா கொங்கராவின் சம்பளக் கோரிக்கைகள் மற்றும் கொடுக்கல்-வாங்கல்கள் முழுமையாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வாதாடியது.

‘பராசக்தி’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களால் 23 காட்சிகள் நீக்கக் கோரப்பட்டது, படத்துக்கான முன்பதிவு தாமதம் போன்ற காரணங்களால் வணிக ரீதியாகப் பாதிப்புகள் ஏற்பட்டன. படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைகளின் வியாபாரம் அப்போதைய நிலையில், முழுமையடையாத சூழல் ஏற்பட்டது. இத்தகைய இக்கட்டான சூழல்களை சுதா கொங்கராவிடம் டான் பிக்சர்ஸ் முறையிட்டபோது அவர் முழுத்தொகைக்கும் இன்வாய்ஸ் (Invoice) அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் பல ஒப்பந்தங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் சார்ந்தது. ஆகையால் ‘இதயம் முரளி’ படத்துக்கு இடைக்காலத் தடை போன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், இரு தரப்பு கணக்குகளையும் ஒரு மத்தியஸ்த தீர்ப்பாயம் மூலம் மட்டுமே விரிவாக ஆராய வேண்டும் என டான் பிக்சர்ஸ் கோரியது. இவர்களின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், ‘இதயம் முரளி’ திரைப்படத்திற்குத் தடை விதிக்க மறுத்து, வழக்கை மத்தியஸ்த தீர்ப்பாய விசாரணைக்கு நேற்று மாற்றி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Sudha Kongara ,Suriya ,Chennai ,Madras High Court ,Don Pictures ,Akash Bhaskaran ,2D Entertainment ,
× RELATED துல்கர் சல்மான் பூஜா ஹெக்டேவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’