கடந்த 1970களில் தமிழக கிராமத்தில் வசிக்கும் ஏழை லிசி ஆண்டனியின் மகன் வெற்றி, படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தியில் இருக்கிறார். அவரும், மாறனும் சின்னச்சின்ன திருட்டுகளின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்கின்றனர். இந்நிலையில், கடன் கொடுத்த கவிதா பாரதியை வெற்றி படுகொலை செய்கிறார். தூக்கு தண்டனை கைதியாக சிறையில் இருக்கும் அவரை, தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய இரவில் நீதிபதி, டாக்டர், சிறை அதிகாரி சந்திக்கின்றனர்.
தூக்கிலிடுவதும் அரசு செய்யும் ஒரு கொலைதான் என்று ஆவேசப்படும் வெற்றிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதா என்பது மீதி கதை. வெற்றி, பிரிகிடா சாகா, லிசி ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மாறன், ‘பருத்திவீரன்’ சரவணன், கவிதா பாரதி, சுப்பிரமணியம் சிவா, ‘அருவி’ மதன், கன்யா பாரதி ஆகியோர் கேரக்டருக்கு வலு சேர்த்துள்ளனர். கோர்ட் ரூம் டிராமாவுக்கான யதார்த்தமான ஒளிப்பதிவை எம்.வி.பன்னீர்செல்வம் கேமரா வழங்கியுள்ளது. நடிகர் தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் கதைக்கு பொருந்துகின்றன.
பின்னணி இசை, காட்சிகளுக்கான வீரியத்தை கடத்தியிருக்கிறது. எடிட்டர் பூபதி வேதகிரி, ஆர்ட் டைரக்டர் சூளை அன்புவின் பணி குறிப்பிடத்தக்கவை. இயக்குனருடன் சேர்ந்து கவிதா பாரதி திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். சட்டமும், நீதியும் குற்றவாளிகளை திருத்துவதற்கு பயன்பட வேண்டுமே தவிர, தண்டிப்பதற்கு அல்ல என்ற கருத்தை சமூக அக்கறையுடன் சொல்லியிருக்கின்றார் இயக்குனர் தயாள் பத்மநாபன்.
