திருமலை: சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி நடிகையை காரில் கடத்தி சென்று நடிகர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரசாத். திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஒரு நடிகையிடம் சென்று, ‘ஒரு திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க, நடிகை தேவைப்படுகிறார். நீங்கள் நடிக்கிறீர்களா’ என கேட்டுள்ளார். அதற்கு அந்த நடிகையும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த படத்தின் படபிடிப்பு கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. ஆனால் அந்த நடிகைக்கு, சம்பளமாக ேபசிய ரூ.90 ஆயிரம் மற்றும் பயணச்செலவுகளுக்கு ரூ.38 ஆயிரம் ஆகியவற்றை தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து நடிகை, கடந்த பிப்ரவரி மாதம் பிரசாத்திற்கு போன் செய்து கேட்டுள்ளார். அதற்கு பிரசாத், பஞ்சாராஹில்ஸில் உள்ள திரைப்பட தயாரிப்பாளரின் அலுவலகத்திற்கு வந்து பணத்தை வாங்கி செல்லும்படி கூறியுள்ளார். அதன்படி நடிகை அங்கு சென்றபோது பிரசாத் பணத்தை கொடுக்காமல் மிரட்டியுள்ளார். மேலும் நடிகையை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்று, எனது ஆசைக்கு இணங்கினால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன் எனக்கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை, பிரசாத்திடம் இருந்து தப்பித்து நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். உடனே நடிகையின் தாய், பிரசாத்தை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவரையும், பிரசாத் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து நடிகை பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சினிமா வட்டாராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

