தேனி: தேவதானப்பட்டி காட்ரோடு பிரிவில் உள்ள பண்ணை வீட்டில் இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. இதில், திரையுலகினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரையுலகில் இயக்குனர் இமயம் என போற்றப்பட்ட இயக்குநர் பாரதிராஜா (84), சென்னையில் நேற்றுமுன்தினம் உடல் நலக்குறைவால் காலமானார்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காட்ரோடு பிரிவில் உள்ள பாரதிராஜாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டு தென்னந்தோப்பில் உடல் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை பாரதிராஜாவின் உடல் தேவதானப்பட்டி பண்ணை வீட்டுக்கு வந்தடைந்தது. அங்கு காலையில் இருந்து பொதுமக்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மல் குமார், வன்னியரசு ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன், மாவட்ட எஸ்பி சினேகாபிரியா ஆகியோரும் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, இறுதி ஊர்வலத்தில் 72 குண்டுகள் முழங்க, போலீசார் சார்பில் பாரதிராஜாவின் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி நிகழ்வில் கவிஞர் வைரமுத்து, நடிகைகள் ராதிகா, நிரோஷா, சுஹாசினி, நடிகர்கள் வடிவேலு, தாமு, நிழல்கள் ரவி, திரைப்பட இயக்குநர்கள் சீமான், பாக்யராஜ், பார்த்திபன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, இளவரசு, சுசிகணேசன், வெற்றிமாறன், ராம், மதுரை முத்து மற்றும் தேனி மாவட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

