விஜயவாடா: புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், சிவராஜ்குமார், ஜான்வி கபூர் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. உலகம் முழுவதும் நாளை திரைக்கு வரவுள்ள இப்படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்தவகையில் விஜயவாடாவில் நடந்த பட விழாவில் ராம் சரண், ஜான்வி கபூர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரசிகர் ஒருவர் மேடையில் அமர்ந்திருந்த ராம் சரணை நோக்கி ஓடி வந்துள்ளார்.
உடனே சுதாரித்து கொண்ட ராம் சரணின் பாதுகாவலர் கெவின் அந்த ரசிகரை அலேக்கால தூக்கி மேடைக்கு கீழே இறக்கிவிட்டார். அவரை தூக்கும் போது அருகில் இருந்த ஜான்வி கபூர் மீது அந்த ரசிகர் விழுந்தார். சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஜான்வி கபூர் பதற்றமடைந்தார். உடனே பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அந்த ரசிகர், ராம் சரண் போன்று ஹேர் ஸ்லைலுடன் கருப்பு நிற வேட்டி சட்டையில் வந்திருந்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

