டிரான்ஸ்பர் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி அதிதி பாலனை திடீரென்று கடத்தி, தனியறையில் சங்கிலியால் பிணைத்து வைக்கும் துஷாரா விஜயன், பிறகு அதிதி பாலன் பெயரில் டிஎஸ்பியாக பதவி ஏற்றுக்கொள்கிறார். அப்போது நடக்கும் அரசு தேர்வு மோசடியை கண்டுபிடிக்க குழுவினருடன் முயற்சி செய்கிறார். பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கிறது. இதற்கும், அதிதி பாலனுக்கும் சம்பந்தம் இல்லை என்றறிந்த துஷாரா விஜயனை கொல்ல ஒரு கும்பல் துரத்துகிறது. காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளை வைத்து நடக்கும் மிகப்பெரிய ஒரு மோசடியை துஷாரா விஜயன் கண்டுபிடிக்கும்போது, அவர் போலி டிஎஸ்பி என்பதை கண்டுபிடித்து துரத்தும் கும்பல் என்ன செய்கிறது என்பது மீதி கதை.
சாதாரண மற்றும் நடுத்தர குடும்பத்து மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மாற்றவும், அரசு வேலைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் நடத்தப்படும் அரசு தேர்வுகளில் நடக்கும் மோசடிகளை யதார்த்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார், எழுதி இயக்கியுள்ள ஏ.சற்குணம். குடிசை வீட்டு பெண், நன்கு படிக்கும் மாணவி, அநீதியை கண்டு கொதிக்கும் டிஎஸ்பி என்று, கேரக்டருக்கு உயிரூட்டிய துஷாரா விஜயனுக்கு இத்தொடர் ஒரு டர்னிங் பாயின்ட். அதிதி பாலனும் அட்டகாசமாக நடித்திருக்கிறார். அப்பாஸ், சப்-இன்ஸ்பெக்டர் துரை சுதாகர், ஏழை குடும்ப மாணவன் ஜெயசூர்யா, வில்லன் நரேன் மணி, வசுந்தரா, மீனாள், காஸ்டபிள் சரவண சக்தி உள்பட அனைவரும் யதார்த்தமாக நடித்து, வெப்தொடருக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.
அருண் அமரேந்திரன் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ் இசையும், ஏ.ரிச்சர்ட் கெவின் எடிட்டிங்கும் சிறப்பு. தினேஷ் சுப்பராயனின் சண்டை காட்சிகள் இயல்பு. இது மாணவ, மாணவிகளின் வலியை பேசும் துணிச்சலான படைப்பு. இயக்குனர் ஏ.சற்குணம் குழுவினருக்கு சல்யூட். இத்தொடர் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ஒளிபரப்பாகிறது.
