சென்னை: ‘அரும்பு மீசை குறும்பு பார்வை’, ‘வெண்நிலா வீடு’, ‘விசிறி’ ஆகிய படங்களை தொடர்ந்து வெற்றிவீரன் மகாலிங்கம் எழுதி இயக்கும் படம், ‘பூ காய் கனி’. தற்போது ‘அயலி’ என்ற வெப்தொடர் நடிகர், நடிகைகளுடன் புகழ் நடித்த ‘சூட்கேஸ்’ என்ற படத்தை அவர் எழுதி இயக்கி முடித்துள்ளார். ‘அடியே வெள்ளழகி’, ‘ஏன் என்னை காதலிச்ச’ ஆகிய சுயாதீன ஆல்பங்களில் நடித்திருந்த கேசிபி மிதுன் சக்ரவர்த்தி ஹீரோவாக அறிமுகமாக, காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தார். ‘விசிறி’ தயாரிப்பாளர் ஏ.ஜமால் சாகிப் தயாரிக்கிறார். ‘சூட்கேஸ்’ ராஜேஸ்வரி வெற்றிவீரன், பழையனூர் சந்தனம் கம்பெனி சார்பில் இணைந்து தயாரிக்கிறார்.
‘டூலெட்’ ஹீரோ சந்தோஷ் நம்பிராஜன், வெற்றிவீரன் மகாலிங்கத்தின் மகன் ராஜூ மகாலிங்கம் ஆகியோருடன் கூத்துப்
பட்டறையில் பயிற்சி பெற்றுள்ள பலர் நடிக்கின்றனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். தன்ராஜ் மாணிக்கம் இசை அமைக்கிறார். கருமாத்தூர் மணிமாறன், வெற்றி வீரன் மகாலிங்கம் பாடல்கள் எழுதுகின்றனர். வி.ஜே.சாபு ஜோசப் எடிட்டிங் செய்ய, வெற்றிவீரன் மகாலிங்கம் அரங்கம் அமைக்கிறார். குரு சின்னச்சாமி இணை தயாரிப்பு செய்கிறார். கடந்த 1986களில் நடந்த கிராமத்து காதலை வெவ்வேறு கோணங்களில் இப்படம் சொல்கிறது.
