×

TN 2026 தங்க நட்சத்திரம்: விமர்சனம்

வட மாநிலத்தை சேர்ந்த குல்கந்த் குமார் (நட்டி நட்ராஜ்) நடித்த படங்கள் பிளாக்பஸ்டர் ஆகிறது. மக்கள் அவரை கொண்டாடுகின்றனர். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ஜமீன்தார் தம்பி ராமய்யா, நட்டி நட்ராஜை ஜமீனில் தங்க வைத்து, அவரை உச்ச நடிகராக்கி, பிறகு தீவிர அரசியலில் ஈடுபட வைத்து, புதிய அரசியல் கட்சியை தொடங்க வைக்கிறார். 2026ல் குல்கந்த் குமார்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற நம்பிக்கையில் தம்பி ராமய்யா ஆடுபுலி ஆட்டம் ஆடுகிறார். அப்போது நட்டி நட்ராஜ் எடுக்கும் திடீர் முடிவு, மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அது என்ன என்பது மீதி கதை.

தம்பி ராமய்யா எழுதிய அரசியல் நையாண்டி கதையை, அவரது மகன் உமாபதி ராமய்யா பட்டை தீட்டி இயக்கி இருக்கிறார். குல்கந்த் குமார் கேரக்டருக்கு நட்டி நட்ராஜை தவிர வேறு யாரையும் யோசித்து பார்க்க முடியவில்லை என்பதே அவருக்கான தலைசிறந்த பாராட்டு. அவரது காட்ஃபாதர் தம்பி ராமய்யா, நடிப்பில் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். அவருடன் பயணிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, நட்டி நட்ராஜின் மனைவி ஷ்ரிதா ராவ், காதலி சாந்தினி தமிழரசன், தோழி யாஷிகா ஆனந்த் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். கதையின் திருப்பத்துக்கு ரெடின் கிங்ஸ்லி உதவியுள்ளார். விஜி சந்திரசேகர், இந்திரஜா ரோபோ சங்கருக்கு இன்னும் கூடுதல் வாய்ப்பு தந்திருக்கலாம்.

அரசியல் கதைக்கேற்ற ஒளிப்பதிவை பி.ஜி.முத்தையா வழங்கியுள்ளார். நடிகரும், இயக்குனருமான தர்புகா சிவாவின் பின்னணி இசை, காட்சிகளுக்கு ஏற்ப பயணித்துள்ளது. அருள் ஆர்.தங்கம் எடிட்டிங் கச்சிதம். திரையுலக உச்ச நட்சத்திரங்களையும், அரசியல்வாதிகளையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் நையாண்டி செய்துள்ள படம் கலகலப்பாக நகர்கிறது. சில நடிகர்களின் அரசியல் ஆசைக்கு பின்னால் இருக்கும் சுயநலத்தை தோலுரித்து காட்டிய இயக்குனர் உமாபதி ராமய்யா, கிளைமாக்ஸில் மாற்றி யோசித்து இருக்கலாம். ஆனாலும் ஜனரஞ்சகமான காமெடி அரசியல் படம் இது.

Tags : TN ,Kulkanth Kumar ,Natti Nataraj ,Zamindar Thambi Ramaiah ,MGR ,Natty Nataraj ,Thambi Ramaiah ,Aadupuli ,Chief Minister of ,Tamil Nadu ,
× RELATED லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) – திரைவிமர்சனம்