×

கண்ணை நம்பாதே - திரை விமர்சனம்

லிபி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியீடும் படம் ' கண்ணை நம்பாதே'. மு மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, ஸ்ரீகாந்த், சதீஷ், ஆத்மிகா, பூமிகா,  உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

உடனடியாக வீடு வேண்டும் என நண்பனுடன் வீடு தேடி அலைகிறார் அருண் ( உதயநிதி ஸ்டாலின் ) . ஒரு வழியாக அடுத்த மாதம் கிளம்பவிருக்கும் சோமுவின் ( பிரசன்னா) ரூம் மேட் ஆக குடியேறுகிறார் அருண்.  அன்று இரவே அருண் சோமு மற்றும் அருணின் நண்பர் மூவரும் வெளியில் சென்று குடித்துவிட்டு சாப்பிடலாம் என முடிவு செய்கின்றனர். ஒயின் ஷாப்பில் சோமு மற்றும் அருண் நண்பர் குடித்துக் கொண்டிருக்க குடிப்பழக்கம் இல்லாத அருண் சாலையில் எதார்த்தமாக வந்து நிற்கிறார், அங்கே ஒரு பெண் காரை ஓட்ட முடியாமல் திணறி சின்ன விபத்தில் சிக்கிக் கொள்கிறார்.

என்னால் வண்டி ஓட்ட முடியவில்லை என்னை வீட்டில் விட முடியுமா என அப்பெண் கேட்க உதவி செய்ய முடிவு செய்கிறார் அருண். கொட்டும் மழையில் நீங்கள் நனைந்து கொண்டு போக வேண்டாம் காரை கொண்டு சென்று விட்டு காலையில் வந்து விடுங்கள் என அப்பெண் சொல்கிறார். மறுநாள் காலையில் காரை வீட்டில் விடலாம் என தயாராகி வரும் அருண் காரின் டிக்கியில் சடலத்தை பார்த்து அதிர்கிறார். எந்தப் பெண்ணை இரவு வீட்டில் பத்திரமாக இறக்கி விட்டாரோ அதே பெண் சடலமாக காரின் பின்பக்கத்தில் கிடக்க இவர் எப்படி இறந்தார் என்ன ஆனது இரவில் என்ன நடந்தது என அடுத்தடுத்த திருப்பனங்களோடு கதை நகர துவங்குகிறது. எப்படி அந்த பெண் கொல்லப்பட்டார் முடிவு என்ன என்பது மீதிக்கதை.

படத்தில் உதயநிதி மெயின் ஹீரோ என்றாலும், எந்த ஒரு மாஸ் கட்சிகளுக்கும் , பில்டப் சீன்களுக்கும் இடமளிக்காமல் கதைக்கு என்ன தேவையோ அந்த கேரக்டரிலேயே பயணத்திருக்கிறார். படத்துக்கு அடுத்த பலம் பிரசன்னாவின் நடிப்பு. பல இடங்களில் நல்லவரா கெட்டவரா  என யோசிக்கும் அளவுக்கு அவர் நடிப்பில் அவ்வளவு நேர்த்தி. ஸ்ரீகாந்த்- பூமிகா  பல வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் என்பதால் கிளாசிக் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகரித்துள்ளன. ஆனால் அந்த ரோஜா கூட்டம் ஜோடி இந்த படத்தின் முற்றிலும் வேறு ஒரு கெட்டப்பில் இணைந்து நடித்துள்ளனர்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் எப்படி பரபர திரில் அனுபவம் கொடுத்தாரோ அதைவிட டபுள் ட்ரீட் திரில்லராக கண்ணை நம்பாதே படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மு. மாறன். திரைக்கதையில் எந்த சினிமா கிளிஷேக்களும்  இல்லாமல் என்ன தேவையோ அதை மட்டும் மிகச் சரியாக வடிவமைத்துள்ளார். சில லாஜிக் தவிர்த்து படம் ஆரம்பித்து முடியும் வரையிலும் நம் மூளையை பிசைந்து கொண்டிருக்கிறது.

படம் முழுக்கவே இரவில் நடைபெறும் கதை என்பதை எங்கேயும் இடையூறாக நினைக்காத படி ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார் ஜலந்தர் வாசன். படத்திற்கு இன்னொரு பலம் சித்து குமாரின் இசை.  வித்தியாசமான எடிட்டிங் மெத்தடை பயன்படுத்தி இருக்கின்றனர். ஒரு காட்சி ஓடிக் கொண்டிருக்கும் பொழுது அடுத்தக் காட்சியில் இருக்கும் வசனம் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியின் மேல் ஏறி வரும் சான் லோகேஷ் எடிட்டிங் ஸ்டைல் படத்திற்கு மற்றும் ஒரு சிறப்பாக மாறி இருக்கிறது. மொத்தத்தில் 'கண்ணை நம்பாதே' திரில்லர் பிரியர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக திருப்பங்களுடன் திக் திக் தருணங்களுடன் தவிர்க்க முடியாத கிரைம் திரில்லர் படமாக மாறி இருக்கிறது.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்