×

விளக்கு திருட முயன்ற அதர்வா

வரும் 10ம் தேதி திரைக்கு வரும் ‘பராசக்தி’ என்ற படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி வெளியிடுகிறார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, லீலா, சேத்தன் நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்தது குறித்து அதர்வா முரளி கூறுகையில், ‘உண்மையிலேயே ‘பராசக்தி’ படத்தில் நடித்தது, மற்ற எந்த படத்திலும் நடித்தபோது எனக்கு கிடைக்காத மிகப்பெரிய, மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்ட சின்னச்சின்ன பொருட்கள் அனைத்துமே அழகாக இருக்கும். குறிப்பாக, ஒரு விளக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது அதை ‘ஆட்டைய’ போட வேண்டும் என்று நினைத்த நான், ஒருநாள் அதை எடுத்துவிட்டேன். ஆனால், ‘படப்பிடிப்பு தளத்தில் விளக்கை திருடிய அதர்வா’ என்று சொல்லி விடுவார்கள் என்று, மீண்டும் அதை அங்கேயே வைத்துவிட்டேன்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் பாடல்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தின் பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நான் இருக்கும் இடத்தையும், என்னை சுற்றியிருக்கும் இடத்தையும் சந்தோஷமாக வைத்திருப்பேன். அதை ரவி மோகனிடம் இருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். முதலில் சிவகார்த்திகேயனை சந்திக்கும்போது, ஒரு நடிகராகத்தான் நினைத்து பேசினேன். அதற்கு பிறகுதான் நெருங்கி பழகினோம். சிலரது வளர்ச்சியை பார்க்கும்போது மட்டுமே நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். அப்படி நான் வியந்து பார்த்து ரசித்தவர்தான் சிவகார்த்திகேயன். அவர் ஐம்பதாவது படம், நூறாவது படம் என்று எத்தனை படங்களில் நடித்தாலும், முதலில் கைதட்டுவது நானாகத்தான் இருப்பேன். ‘பராசக்தி’ படம் வெளியாகும்போது அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன். சுதா கொங்கராவின் கல்ட் ஃபிலிம் ஆக இப்படம் இருக்கும்’ என்றார்.

Tags : Atharvaa ,Inpan Udhayanidhi ,Red Giant Movies ,Akash Bhaskaran ,Dawn Pictures ,G.V. Prakash Kumar ,Sudha Kongara ,Sivakarthikeyan ,Ravi Mohan ,Atharvaa Murali ,Leela ,Chethan ,
× RELATED கிளாமரில் கிறங்க வைக்கும் அமைரா