×

மார்க்: விமர்சனம்

திடீரன்று ஒரேநாளில் 18 சிறுவர், சிறுமியர் கடத்தப்படுகின்றனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி கிச்சா சுதீப், அவர்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். இந்நிலையில், முதலமைச்சராக வேண்டும் என்ற வெறியில், ஏற்கனவே முதலமைச்சராக இருக்கும் தனது தாயை மருத்துவமனையில் வைத்து ஷைன் டாம் சாக்கோ படுகொலை செய்த வீடியோவை கண்டுபிடிக்க கிச்சா சுதீப் முயற்சிக்கிறார். இரு சம்பவங்களுக்கு தொடர்பு இருப்பதையும், அதற்கு காரணமான ஆட்களையும் அவர் கண்டுபிடிக்கும்போது எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அது என்ன? ஆடுபுலி ஆட்டத்தில் கிச்சா சுதீப் ஜெயித்தாரா என்பது மீதி கதை. காக்கி அணியாமல் அதிரடி நடவடிக்கை போலீஸ் அதிகாரியாக வரும் கிச்சா சுதீப், ஆக்‌ஷனில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். பன்ச் டயலாக் பேசி எதிரிகளை பந்தாடுகிறார். காதல் காட்சிகள், டூயட் இல்லாதது ஆறுதல்.

வில்லன்கள் நவீன் சந்திரா, விக்ராந்த், குரு சோமசுந்தரம், ஷைன் டாம் சாக்கோ, ஜி.எம்.குமார் ஆகியோர் கேரக்டருக்கேற்ப நடித்துள்ளனர். முக்கியமான கேரக்டர்களில் யோகி பாபு, ரோஷிணி பிரகாஷ், தீப்ஷிகா சந்திரன், டிராகன் மஞ்சு, பாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் கவனத்தை ஈர்க்கின்றனர். சேகர் சந்துரு ஒளிப்பதிவும், பி.அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளன. மேலும், எஸ்.ஆர்.கணேஷ் பாபுவின் எடிட்டிங், காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறது. ‘லாஜிக் பார்க்கவில்லை என்றால், இந்த மேஜிக்கை ரசிக்கலாம்’ என்று எழுதி இயக்கியுள்ள விஜய் கார்த்திகேயா, ஒரு மாஸ் ஆக்‌ஷன் படத்தை கொடுத்து, ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு மட்டும் விருந்து படைத்துள்ளார். வன்முறை காட்சி களை குறைத்திருக்க வேண்டும்.

Tags : Mark ,Kiccha Sudeep ,Minister ,Shine Tom Chacko ,Kiccha ,
× RELATED பராசக்தி ஷூட்டிங்கில் எனக்கு...