×

நடிகைகளின் ஆடை குறித்து பேச்சு; தெலுங்கு நடிகருக்கு கடும் கண்டனம்

தெலுங்கு நடிகர் சிவாஜி, பிந்து மாதவி நடித்துள்ள `தண்டோரா’ என்ற படம் நாளை (25ம் தேதி) வெளியாகிறது. இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சிவாஜி, ’ஹீரோயின்கள் கண்டபடி உடைகள் அணிந்தால், நீங்கள்தான் பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும். என்னை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அப்படி நீங்கள் எடுத்துக் கொண்டாலும் எனக்கு பிரச்னை இல்லை. எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியும். உங்கள் அழகு முழுதாக மூடும் சேலையில்தான் உள்ளதே தவிர, அங்கங்கள் தெரியும்படி அணியும் உடைகளில் இல்லை’ என்றார். அவரது பேச்சு குறித்து பல்வேறு தரப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பின்னணி பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, ஏற்கனவே சமூக ஊடகங்களில் சிவாஜிக்கு எதிராக தனது கருத்துகளை தெரிவித்திருந்தார். அதில் அவர், ‘பெண்கள் குறித்து சிவாஜி பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர் ஜீன்ஸ் மற்றும் ஹூடி அணிந்துள்ளார். அவர் வேட்டி மட்டுமே அணிய வேண்டும். இந்திய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும். பொட்டு அணிய வேண்டும். அவர் திருமணமானவராக இருந்தால், அவர் திருமணமானவர் என்பதை குறிக்க கங்கணம் மற்றும் மெட்டி அணிய வேண்டும். இங்கு பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தெலுங்கு நடிகையும், தொகுப்பாளினியுமான அனசுயா பரத்வாஜும் சிவாஜியின் பேச்சுக்கு எதிராக தனது கருத்தை தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘இது எங்கள் உடல். உங்களுடையது அல்ல’ என்றும், மற்றொரு பதிவில், ‘ஒரு பெண்ணின் ஆடை என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம்’ என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அனசுயா பரத்வாஜின் கருத்துகள் வைரலாகி வருகிறது. தவிர, சமூக ஊடகங்களில் சிவாஜிக்கு எதிரான கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன.

Tags : Sivaji ,Bindu Madhavi ,
× RELATED ஏஐ டெக்னாலஜி ஆதிக்கத்தால் இசை அழிந்துவிடாது: சாம் சி.எஸ் நம்பிக்கை