ரெட் ப்ளூ ஸ்டுடியோஸ் சார்பில் ஜி.முத்து மனோகரன் தயாரிக்க, இளையராஜா.சி இயக்கத்தில் கூல் சுரேஷ் நடிக்கும் ‘உள்ளே செல்லாதீர்கள் ‘என்ற படத்தின் பர்ஸ்ட் லுக்கை சந்தானம் வெளியிட்டார். அவர் பேசுகையில், ‘கூல் சுரேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் இது. ‘உள்ளே செல்லாதீர்கள்’ என்ற தலைப்பை பார்த்துவிட்டு தவறாக நினைக்காதீர்கள். படத்தை நம்பி தியேட்டருக்குள் சென்றால் சந்தோஷப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். பேய் கதைகளை படமாக்கினால் தப்பித்துக்கொள்ளலாம். அந்த பாணியில் படத்தை உருவாக்கியுள்ளனர். கூல் சுரேசும், நானும் டி.ராஜேந்தர் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ என்ற படத்தில் துணை நடிகர்களாக அறிமுகமாகி கஷ்டப்பட்டு முன்னேறியுள்ளோம்.
நிறையபேர் திரைத்துறைக்கு வந்து போராடி, பிறகு முடியவில்லை என்று மனரீதியாக சோர்வடைந்ததை பார்த்துள்ளோம். கூல் சுரேஷ் அப்படிப்பட்டவர் கிடையாது. கடந்த 20 வருடங்களாக போராடி, எவ்வளவு பேர் கேலி, கிண்டல் செய்தாலும் கவலைப்படாமல் முன்னேறினார். யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல், நாம் எதை நோக்கி செல்கிறோமோ அந்த பாதையில் உறுதியாக செல்ல வேண்டும் என்பதற்கு கூல் சுரேஷ் ஒரு நல்ல உதாரணம். அவருக்கு நான் அறிவுரை சொல்ல மாட்டேன். காரணம், அறிவுரை சொன்னால் கேட்க மாட்டார். நான் சொன்னால் கூட அவர் கேட்க மாட்டார்’ என்றார்.
