×

பிரபுதேவா பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கமென்ட்

ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவா இருவரும் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள படம், ‘மூன்வாக்’. மனோஜ் நிர்மலா தரன் தயாரித்து இயக்குகிறார். தனது நீண்ட திரையுலக பயணத்தில் முதல்முறையாக, இதில் இடம்பெறும் 5 பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். ‘ஏத்து’, ‘மெகரினா’, ‘மயிலே’, ‘டிங்கா’, ‘ஜிகர்’ ஆகிய பாடல்களை அவர் பாடியிருக்கிறார். மனோஜ் நிர்மலா தரன் கூறுகையில், ‘மியூசிக்கில் ஏ.ஆர்.ரஹ்மான், டான்ஸில் பிரபுதேவா இருவரும் இந்தியாவின் தலைசிறந்த திறமைசாலிகள். ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ போன்ற படங்களின் அனுபவத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வர முயற்சித்துள்ளேன். 3 வருடங்களாக உருவாக்கிய இப்படம், வரும் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது. முதலில் இந்தியாவின் முன்னணி பாடகரை வைத்து அனைத்து பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒலிப்பதிவு செய்தார்.

எனினும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடினால் சிறப்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும் என்று விடாமுயற்சியுடன் போராடினேன். அதன் பலனாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடினார். ‘மயிலே’ என்ற பாடலுக்கு பிரபுதேவா ஒரு மாதம் ரிகர்சல் செய்தார். இப்பாடலுக்காக ஒரு முழு உலகத்தை சிஜியில் உருவாக்கி இருக்கிறோம்’ என்றார். ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், ‘பிரபுதேவாவுடன் மீண்டும் பணியாற்றுவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அன்றைக்கும், இன்றைக்கும் அவரிடம் ஒரே ஒரு வித்தியாசம், கொஞ்சம் நரைச்ச முடி மட்டும்தான். பிரபுதேவாவின் எனர்ஜி அப்படியே இருக்கிறது. அவர் ஆடுவதை பார்க்கும்போது, இன்னும் அதிக உற்சாகத்தை கொடுக்கிறது. ஒரு மிகப்பெரிய நடன இயக்குனர், ஒரு பாடலுக்காக ஒரு மாத காலம் ஒத்திகை மேற்கொண்டதை இதுவரை நான் பார்த்ததில்லை.

அந்த அதீத அர்ப்பணிப்பு இன்னும் ஊக்கமளிக்கிறது. இசை அமைப்பாளராக, ஒரு பாடலுக்கான சரியான பாடகரை தேர்வு செய்யும் கடமை எனக்கு இருக்கிறது. இயக்குனர் எனது பரிந்துரைகளை ஏற்காமல், ஒவ்வொரு பாடலுக்கும் இதை நான்தான் பாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நானும் இந்த ஒரு படத்துக்கு மட்டுமாவது எல்லா பாடல்களையும் நானே பாடிவிடலாம் என்று முடிவு செய்தேன். அப்போது இயக்குனரின் முகத்தில் தெரிந்த அன்பும், பிரபுதேவாவுடன் எனது கூட்டணியை அதே எனர்ஜியுடன் திரையில் மீண்டும் கொண்டு வருவேன் என்று சொன்ன உறுதியும், ஆர்வமும் என் மனதை மாற்ற, உடனே நான் சரி என்று சொல்லி பாடிவிட்டேன். படத்தின் கதையைக்கூட நான் கேட்கவில்லை’ என்றார்.

Tags : A.R. Rahman ,Prabhu Deva ,Manoj Nirmala Dharan ,India ,
× RELATED விமர்சனம் நன்றாக இருந்தால்தான் படம்...