மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் மம்மூட்டி, விநாயகன் நடித்துள்ள ‘களம்காவல்’ என்ற படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. அதற்கு நன்றி தெரிவித்து மம்மூட்டி, விநாயகன் இணைந்து சிறப்பு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் மம்மூட்டி பேசுகையில், `நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்த ‘களம்காவல்’ என்ற படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிய எல்லா ரசிகர்களுக்கும் நன்றி சொல்வதற்குத்தான் இந்த வீடியோவில் நாங்கள் தோன்றியிருக்கிறோம்.
ஒப்பீட்டளவில் புதிய எழுத்தாளரும், ஒரு புதிய இயக்குனரும், நிறைய புதியவர்களும், பழைய கலைஞர்களுமாக இப்படத்துக்கு பின்னாலும், முன்னாலும் உழைத்துள்ளனர். எனவே, மொழி வேறுபாடு இல்லாமல் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு மலையாளத்திலேயே நன்றி சொல்கிறேன். உங்களால் எனது நன்றியை புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்’ என்றார். அவருக்கு பிறகு பேசிய விநாயகன், `நன்றி, நன்றி, அனைவருக்கும் நன்றி. இப்போது என்னிடம் பகிர்ந்துகொள்வதற்கு சந்தோஷம் மட்டுமே இருக்கிறது. சொல்ல வேண்டியது எல்லாம் படத்தில் இருக்கிறது’ என்றார்.
