×

சூப்பர் டூப்பர் - விமர்சனம்

வில்லனின் சூப்பர் பிளான்களை எல்லாம் டூப்பராக்கும் ஹீரோவின் கதை இது. ‘ஆண்மை தவறேல்’ பட துருவாவும், அவரது நண்பர் சிவா ஷாராவும் சின்னச் சின்ன ஏமாற்று வேலைகள் செய்து ஜாலியாக இருக்கின்றனர். இந்நிலையில், பெரிய வேலை ஒன்றை செய்து பார்க்கலாம் என்று திட்டமிட்டு, இந்துஜாவை ஒரு இடத்துக்கு காரில் கடத்தி செல்கின்றனர். கூடவே பல பிரச்னைகளையும் சந்திக்கின்றனர். இந்துஜாவின் அப்பா, போதை மருந்து கடத்தல் தடுப்பு பிரிவில் அதிகாரியாக இருக்கிறார். அவரது மகன் ஆதித்யா ஷிவ்பிங்க், அவரை தன் கடத்தலுக்கு உதவ சொல்கிறார். அதற்கு அவர் மறுப்பதால், அப்பாவை போட்டு தள்ளிவிட்டு தன் தங்கையை தேடுகிறார்.

காரணம், இந்துஜாவின் காரில்தான் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்து இருக்கிறது. கடத்தல் மன்னனை சமாளித்து, இந்துஜாவை அந்த பிரச்னையில் இருந்து துருவா எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி மற்றும் சில திடுக்கிடும் திருப்பங் கள் கலந்து என்டர்டெயின்மென்ட் படமாக கொடுக்க முயற்சித்து இருக்கிறார், அறிமுக இயக்குனர் ஏ.கே (அருண் கார்த்திக்). ஒரு சுவாரஸ்யமான கதையை உருவாக்கிய அவர், அதை சுவாரஸ்யமான படமாக கொடுக்க சற்று தடுமாறி இருக்கிறார். துருவாவுக்கு காமெடி ஒர்க்அவுட் ஆகிறது. அப்படியே ஆக்‌ஷனும் கைகூடி வருகிறது.

ஆனால், நடிப்புதான் சற்று முரண்டு பிடிக்கிறது. 30 கோடி ரூபாய் போதைப் பொருள் காணாமல் போனதை நண்பன் சொல்லும்போது, ஏதோ சொம்பு காணாமல் போன மாதிரி ரியாக்‌ஷன் தருகிறார். நண்பராக வரும் சிவா ஷாரா, படம் முழுக்க பேசியே கொல்கிறார். இடையிடையே டபுள் மீனிங் டயலாக் வேறு. இந்துஜா நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார். ஆனால், சில காட்சிகள் வலுவின்றி நகர்வதால், அவரது நடிப்பு பயனற்றுப் போகிறது. வில்லன் யார் என்பதையும், தனது தாயின் சுயரூபத்தையும் அறியும்போது அவர் எப்படி கொதித்திருக்க வேண்டும்? வெறுமனே இரண்டு சொட்டு கண்ணீர் வடிப்பதுடன் சரி.

வில்லன் மைக்கேலாக வரும் ஆதித்யா ஷிவ்பிங்க் மிரட்டுகிறார். இன்னொரு வில்லன் வேதாவாக வரும் ஸ்ரீனியும் கூட நடிப்பில் கவனிக்க வைக்கிறார். தளபதி ரத்னம் மற்றும் சுந்தர் ராம் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு மாறுபட்ட வண்ணம் பூசியிருக்கிறது. திவாகரா தியாகராஜனின் பின்னணி இசை, காட்சிகளின் நகர்வுக்கு உதவி செய்துள்ளது. பாடல்களில், இந்துஜா ஆடியுள்ள ‘ஜில் ஜில் ராணி’ ஆட்டம் போட வைக்கிறது. ஒருவர் இறந்து கிடக்கும்போது அதைச்சுற்றி நடக்கும் காதல் கூத்துகள் மாதிரி, படம் முழுவதும் புதுமை என்ற பெயரில் ஏதேதோ செய்துள்ளனர். நல்ல கதையாக இருந்தாலும், வலுவில்லாத திரைக்கதை மற்றும் அக்கறை இல்லாத காட்சி அமைப்புகளால் படத்தின் தரம் குறைகிறது.

Tags :
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்