×

பக்ரீத் - விமர்சனம்

விவசாயம் செய்து வருவதையே தனது உயிராக மதிக்கக்கூடிய சராசரி இளைஞன் விக்ராந்த், வங்கியில் கடன் வாங்கி, கோர்ட் வழக்கு காரணமாக தரிசு நிலமாகவே மாறிவிட்ட தனது நிலத்தை விளைநிலமாக்க முயற்சிக்கிறார். இதற்காக அவருக்கு தொிந்த இஸ்லாமியர் ஒருவரிடம் கடன் வாங்க சென்ற இடத்தில், பக்ரீத் பண்டிகைக்கு பலியிட வந்த ஒட்டகத்துடன் குட்டி ஒட்டகமும் இருப்பதை பார்க்கிறார். அதை தானே வளர்ப்பதாக சொல்லி கொண்டு வருகிறார். விக்ராந்த் மனைவி வசுந்தராவும், மகள் ஸ்ருத்திகாவும்  ஒட்டகத்தை பாசத்துடன் வளர்க்கின்றனர். ஒரு வருடத்துக்கு பிறகு அந்த ஒட்டகத்தால் இங்குள்ள சூழ்நிலைக்கேற்ப வாழ முடியவில்லை. உடல் ரீதியான நோய் காரணமாக தளர்ந்துவிடுகிறது.

எனவே, அது வசதியாகவும், இயல்பாகவும் வாழ தகுதியான  ராஜஸ்தானில் கொண்டு போய் விட முடிவு செய்த விக்ராந்த், லாரியில் ஒட்டகத்தை ஏற்றிக்கொண்டு பயணம் செய்கிறார். அந்த நேரத்தில் ஏற்படுகின்ற விபரீதமான அனுபவங்கள்தான் திரைக்கதை. ஒட்டகத்தை உரிய முறையில் கொண்டு போய்  சேர்த்தாரா என்பது, நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ். ஒட்டகத்தை முழுமையாக நடிக்க வைத்து உருவான முதல் தமிழ்ப் படம் என்ற வகையில், கவனத்தை ஈர்க்கிறது படம்.

ராஜஸ்தானில் இருந்துதான் ஒட்டகங்கள் சென்னை நோக்கி வரும். ஆனால், சென்னையில் இருந்து ஒட்டகம் ராஜஸ்தானை நோக்கி பயணித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து, அதில் ஒரு ஏழை விவசாயியின் கதை மற்றும் ஒட்டகத்துக்கும், அவரது குடும்பத்துக்குமான பாசப்பிணைப்பு,  அசைவ உணவு தொடர்புடைய மதப் பிரச்னை, இந்தியாவிலுள்ள வெவ்வேறு கலாச்சார மக்களின் விருப்பு, வெறுப்பு ஆகியவற்றை கலந்து தந்துள்ளார் இயக்குனர் ஜெகதீசன் சுபு. ஏழை விவசாய இளைஞன் கேரக்டரில்  வாழ்ந்துள்ளார், விக்ராந்த். ஒட்டகத்தின் மீது பாசத்தைப் பொழிவதும், பிறகு அதை காணாமல் தவிப்பதும், வடநாட்டில் மொழி தெரியாமல் திண்டாடுவதுமாக, நடிப்பில் அடுத்தகட்டம் நகர்ந்துள்ளார்.

விவசாயி வாழ்க்கை கவலை நிறைந்தது என்பதற்காக, எல்லா நேரத்திலும் சோகமாக இருக்க வேண்டுமா? வசுந்தரா பேச்சும், நடிப்பும் கிராமத்து பெண்ணை கண் முன்னால் நிறுத்துகிறது. ஒட்டகத்தை பார்த்து ஆச்சரியப்படுவது, அது சாப்பிடும்போது மகிழ்வது, பிறகு அதை பிரிந்து தவிப்பது என, எல்லா உணர்ச்சி களையும் கண்களில் காட்டி அசத்துகிறாள் பேபி ஸ்ருத்திகா. மற்றும் விக்ராந்தின் பயணத்துக்கு உதவும் ஊர் நண்பரும், வடநாட்டு நண்பர்களும் நன்கு நடித்துள்ளனர். டி.இமான் இசையில், ‘ஆலங்குருவிகளா’ பாட்டு மனதை ஈர்க்கிறது.

பின்னணி இசை உருக வைக்கிறது. ஒளிப்பதிவாளராக தன் பங்கை சரியாக செய்திருக்கிறார், ஜெகதீசன் சுபு. படத்தின் ஹைலைட்டான பாலைவன காட்சியில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். வித்தியாசமான, மிகவும் உணர்வுப்பூர்வமான கதையை சொல்ல நினைத்த இயக்குனர், அந்த உணர்வை ரசிகனுக்கு கடத்த மேலும் முயற்சித்து இருக்கலாம். அண்ணன் நிலத்தை அபகரிக்க முயலும் ரியல் எஸ்டேட் கதையை, பாதியிலேயே விட்டுவிட்டனர். ராணுவ வீரர்களை ஒட்டகம் காப்பாற்றியதாக சொல்வதில் தெளிவு இல்லை. நாய், பூனை, ஆடு, மாடு போன்று ஒட்டகமும் அன்பான விலங்கு என்றாலும், ஒட்டகத்துக்கு அன்பை வெளிப்படுத்த தெரியாது. அதற்கு தகுந்த மாதிரி காட்சிகளை அமைத்திருந்தால், பக்ரீத்தை இன்னும் சிறப்பாக கொண்டாடி இருக்கலாம்.

Tags :
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்