×

கென்னடி கிளப் - விமர்சனம்

ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஏழை, எளிய பெண் கள், டெல்லியில் உள்ள கபடி லாபிகளை உடைத்து எப்படி ஜெயிக்கின்றனர் என்பது கதை. வெண்ணிலா கபடி குழு படத்தில், ஆண்கள் கபடி போட்டியில் இருந்த உள்ளூர் அரசியலை பற்றி பேசிய இயக்குனர் சுசீந்திரன், கென்னடி கிளப் படத்தில் தேசிய அரசியலை பேசியுள்ளார். கபடிக்கு இத்தனை பெரிய வரலாறா? இவ்வளவு விஷயங்களா? இத்தனை நுணுக் கங்களா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு 100 சதவீத ஸ்போர்ட்ஸ் படத்தை கொடுத்துள்ளார்.

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பாரதிராஜா, கபடியை தனது உயிர் போல் மதிக்கிறார். ஏழை பெண்களுக்கு பயிற்சி அளித்து, பிறகு அவர்களை கபடியில் சாதிக்க வைத்து, அவர்களை அரசாங்க பணிகளில் அமர்த்த வேண்டும் என்பது அவர் லட்சியம். இதற்காக அவர் கென்னடி கிளப் என்ற டீம் உருவாக்குகிறார். ஒருநாள் திடீரென்று அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடக்கிறது. இதனால், தன் முன்னாள் மாணவனும், புரோ கபடி வீரனும், கபடி மூலம் ரெயில்வே பணிக்கு சென்றவருமான சசிகுமாரை தனது ஊருக்கு வரவழைக்கிறார்.

அவரும் அந்த பெண்களுக்கு பயிற்சி அளித்து தேசிய போட்டியில் வெற்றிபெற வைத்தாலும், காமன்வெல்த் போட்டியில்  கலந்துகொள்ள, ஒரு வீராங்கனைக்கு 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார், தேர்வுக்குழு தலைவர் முரளி சர்மா. இதனால், காமென்வெல்த் போட்டிக்கு தேர்வான வீராங்கனை வித்யா தற்கொலைக்கு முயற்சி செய்ய, உடனே கென்னடி கிளப் கலைந்து விடுகிறது. என்றாலும், கென்னடி கிளப்பை புதுப்பித்து, மீண்டும் அவர்கள் எப்படி தேசிய விளையாட்டில் ஜெயிக்கின்றனர் என்பது கிளைமாக்ஸ்.

மேலோட்டமாக  பார்த்தால், ஒரு ஸ்போர்ட்ஸ் மூவிக்கான டெம்ப்ளேட் கதைதான் என்றாலும், அதை மண்சார்ந்து கொடுத்த விதத்தில் கென்னடி கிளப் படம் வித்தியாசப்படுகிறது. பாரதிராஜா நடிப்பு பிரமாதம் என்றாலும், சில காட்சிகளில் அவரது அதீத நடிப்பு தெரிகிறது. சசிகுமார் வழக்கம் போல் தனது பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார். ஆனால், கபடி வீரருக்கான முறுக்கேறிய உடம்பு மிஸ்சிங். மீனாட்சி கோவிந்தராஜ் நம்பிக்கையான புதுவரவு. காதல் காட்சிகள் இல்லை என்றாலும், செல்லமான கோபம் மற்றும் விளையாட்டில் தீவிரம் என்று மனசுக்குள் வந்து உட்கார்ந்து விடுகிறார்.

சூரியின் காமெடி சிரிக்க வைத்தாலும், சீரியஸ் கேரக்டரில் வந்து, அந்த காட்சியின் தீவிரத்தை குறைத்துவிடுகிறார். நிஜ கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் ஜீவா, அருள்மொழி, ஸ்வேதா, சித்ரா, மேகலட்சுமி, ஹேமலதா, செல்வராணி, சவுந்தர்யா, ஆஷா, பிருத்வி, திவ்யா மற்றும் இரட்டையர்கள் வித்யா, விருந்தா ஆகியோர் திரை நடிப்பிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவும், டி.இமான் பின்னணி இசையும் படத்தை விறுவிறுப்பாக்குகிறது.

‘கபடி... கபடி’ பாடல், இனி கபடி விளையாட்டின் கீதமாக ஒலிக்கும். ஆண்டனி எடிட்டிங், விளையாட்டு போட்டிகளை சீட்டின் நுனியில் அமர்ந்து ரசிக்க வைத்துள்ளது. தற்கொலைக்கு முயற்சிக்கும் வித்யாவின் வீடியோ வாக்குமூலம் போதுமே, போட்டி தேர்வாளர் முரளி சர்மாவின் முகமூடியை கிழிக்க. அதை விட்டுவிட்டு, ஏன் இவ்வளவு பெரிய போராட்டம்? அவருடைய ஊழல்களை மீடியா முன் வெட்ட வெளிச்சமாக்குவேன் என்று சவால் விடுகிறார் சசிகுமார். ஆனால், கடைசிவரை அப்படி எதுவும் செய்யவில்லை. ஒரு காட்சியில் பாரதிராஜா, சசிகுமார் இடையிலான மோதல் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், நமது பாரம்பரிய விளையாட்டான கபடி பற்றிய பதிவு என்ற வகையில், முக்கியத்துவம் பெறுகிறது இப்படம்.

Tags :
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...