ரசிகை எழுப்பிய மத அடையாள சர்ச்சை; மாதவன் நறுக்

சுதந்திர தினவிழா, ரக்‌ஷா பந்தன் மற்றும் ஆவணி அவிட்ட வாழ்த்துக்களை கூறி நடிகர் மாதவன் ஒரு புகைப்படம் வெளியிட்டார். அதைப்பார்த்த அவரது ரசிகை ஒருவர், ‘பூஜை அறையில் பின்னணியில் சிலுவை இருப்பது ஏன்? அது என்ன கோவிலா? நீங்கள் என்னுடைய மதிப்பை இழந்து விட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்து கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? குறிப்பிட்டிருந்தார். இதற்கு நறுக் பதில் அளித்தார் மாதவன். உங்களைப் போன்றவர்களிடமிருந்து மரியாதை கிடைக்க வேண்டும் என்று நான் நினைப்பது கிடையாது.

நீங்கள் பின்னால் இருந்த பொற்கோயில் படத்தை பார்க்கவில்லை, அப்படிபார்த்திருந்தால் சீக்கிய மதத்துக்கு மாறினேனா? என்று கேட்டிருப்பீர்கள். எனக்கு தர்காவிலிருந்தும் ஆசிர்வாதம் உள்ளது. சில படங்கள், அடையாளங்கள் பரிசுப் பொருட்களாக வந்தது. சிலவற்றை நானே வாங்கினேன். என் வீட்டில் எல்லா மத நம்பிக்கையை சேர்ந்தவர்களும் வேலையை செய்கிறார்கள்.

எனது அடை யாளத்தை பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில், எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என்றுதான் சிறுவயதிலிருந்தே எனக்கு கற்றுத் தரப்பட்டுள்ளது. எம்மதமும் எனக்கு சம்மதமே. எனது மகனும் இதை பின்பற்றுவார் என நம்புகிறேன். நான் தர்காவுக்கு செல்வேன், குருத்வாராவுக்கு செல்வேன். தேவாலயத்துக்கு செல்வேன்.

அருகில் கோயில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் இந்து என்று தெரிந்தும்கூட அங்கெல்லாம் எனக்குப் பூரண மரியாதை கிடைத்தது. அதை நான் எப்படி திருப்பிச் செலுத்தாமல் இருக்க இயலும். எனது பரந்துப்பட்ட பயண அனுபவங்கள் அன்பு, மரியாதை செய்யவே கற்று கொடுக்கிறது. அதுவே உண்மையான மார்க்கம் என்றும் சொல்லி கொடுத்திருக்கிறது. உங்களுக்கும் அன்பும், அமைதியும் கிட்டட்டும்.

Tags :
× RELATED ஏலியன் கதையில் ரகுல் பிரீத் சிங்