×

ஆடை - விமர்சனம்

ஆடையின் முக்கியத்துவம் எப்போது தெரியும்? அது இல்லாமல் ஒரு இடத்தில் நிற்கும்போது தெரியும். பிராங்க் என்ற பெயரில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோவில், அடுத்தவர் உணர்வுடன் விளையாடுவதால் ஏற்படும் விபரீதம் என, இரு விஷயங்களை திரைக்கதையில் இணைத்து கொடுத்துள்ளார் இயக்குனர் ரத்னகுமார். டி.வியில் பிராங்க் ஷோ நடத்துவதில் பலே கில்லாடி, அமலா பால். மது, சிகரெட் என்று ஜாலியாக இருக்கும் சுதந்திரப் பெண். திடீரென்று அவரது அலுவலகம் இடம் மாறுகிறது. காலியான பழைய அலுவலகத்தில், அமலாவின் பிறந்தநாளை மது விருந்துடன் கொண்டாடுகின்றனர் நண்பர்கள்.

அப்போது அமலாவுக்கும், சக பணியாளர் ரம்யாவுக்கும் ஒரு போட்டி காரணமாக சின்ன மோதல் ஏற்படுகிறது. நிர்வாணமாக மாறி, செய்தி வாசிக்க வேண்டும் என்பது அந்த போட்டி. அனைவருக்கும் போதை தலைக்கு ஏறி, எப்படியோ அந்த இரவு கழிகிறது. விடிந்து பார்க்கும்போது அமலாவுக்கு அதிர்ச்சி. அவர் முழு நிர்வாணமாக இருக்கிறார். நண்பர்கள் யாரும் இல்லை. காலியான பிரமாண்டமான அலுவலகத்திற்குள் அவரது நிர்வாணத்தை மறைக்க எந்த வாய்ப்பும் இல்லை. யார் அவரை நிர்வாணமாக்கியது? என்ன நடந்தது? மானத்துடன் தப்பித்தாரா என்பது மீதி கதை.

அமலாவின் சினிமா கேரியரில், மைனாவுக்கு பிறகு இது ஒரு முக்கியமான படம். போல்டான அல்ட்ரா மாடர்ன் பெண்ணை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். மேக்கப் இல்லாமல் இயல்பான தோற்றத்தில் அவர் காட்டும் கெத்து, செம. அவர் நிர்வாணமாக அலறித் துடிக்கும் காட்சிகளில் துளியளவு கூட ஆபாசம் இல்லை. அவரது மானத்தைக் காக்க ஒரு துண்டு துணியாவது கிடைக்காதா என்ற தவிப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம், நிர்வாண காட்சிகளை நாகரிகமாக படமாக்கியுள்ளனர்.

அமலாவின் நண்பர்கள் விவேக் பிரசன்னா, ரம்யா, ரோஹித் நந்தகுமார், கிஷோர் தேவ் ஆகியோர் யதார்த்தமாக நடித்துள்ளனர். விஜய் கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவும், பிரதீப் குமார் மற்றும் ஊர்கா பேண்ட்டின் பின்னணி இசையும் படத்தின் தரத்தை உயர்த்துகிறது. பார்ட்டி கொண்டாடிய நண்பர்கள் குழு, அமலாவை தனியாக விட்டுச் சென்றது ஏன்? பார்ட்டிக்கு பிறகு ரம்யா என்ன ஆனார்? கிளைமாக்சில் வரும் திடீர் கேரக்டரின் திட்டத்தில் லாஜிக் இடிக்கிறது. இதுபோல் சில குறைகள் இருந்தாலும், நேர்த்தியாக நெய்யப்பட்டு இருக்கிறது ஆடை.

Tags :
× RELATED டேரோட் – திரைவிமர்சனம்