×

கடாரம் கொண்டான் - விமர்சனம்

பல மொழிகளில் ரீமேக்கான பாயின்ட் பிளாங்க் (பிரெஞ்சு) படத்தை அதன் தரம், மணம், குணம் குறையாமல் தமிழுக்கு அளித்திருக்கும்  படம். ரொம்ப ஸ்டைலிஷ்சான ஆக்‌ஷன் கேங்ஸ்டர் கதை. விறுவிறுப்பு குறையாமல் கொடுத்துள்ளார், இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா. மலேசியாவில்  கொடூர குற்றவாளிகளையும், தாதாக்களையும் பிடிக்க போலீஸ் கிரைம் இன்வெஸ்டிகேஷன் டீம் அமைப்பு இயங்குகிறது. லீனா குமார் தலைமையிலான டீம்  நேர்மையாக இருக்கிறது. விகாஸ் ஸ்ரீவத்சவ் தலைமையிலான டீம் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, கேங்ஸ்டர்களுடன் கூட்டணி அமைத்து கோடிக்கணக்கில் பணம் சேர்க்கிறது.

மலேசியா  கோடீஸ்வரர் மகன், சொத்துக்காக தன் தந்தையை கொல்ல விகாஸ் டீமை  அணுகுகிறான். கோடீஸ்வரை கொன்று, பழியை முன்னாள் டபுள் ஏஜென்டும், தற்போதைய அதிரடி கேங்ஸ்டருமான விக்ரம் மீது போட நினைக்கிறது அந்த டீம்.  இதற்காக அவரது வழக்குகள் சம்பந்தப்பட்ட பென்டிரைவ், கொல்லப்படும் கோடீஸ்வரர்  அலுவலகத்தில் இருப்பதாக சொல்லி, அங்கு அவரை வரவழைக்கிறது. தான் சிக்க  வைக்கப்படுகிறோம் என்பதை உணரும் விக்ரம், உடனே அங்கிருந்து தப்பிக்கிறார். இதில்  காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அங்கு டாக்டராக பணிபுரியும் அபி ஹசனின் மனைவி அக்‌ஷரா ஹாசனை கடத்தி, விக்ரமை மருத்துவமனையை விட்டு வெளியே அழைத்து வர ஒரு  கும்பல் மிரட்டுகிறது. வேறுவழியின்றி அபி ஹசன் விக்ரமை வெளியே அழைத்து செல்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.
முதல்முறையாக விக்ரம் ஸ்டைலிஷ்சான கேரக்டரில்  நடித்துள்ளார். அவரது தோற்றமும், மேனரிசமும் நடுத்தர வயதை தாண்டிய  ஹாலிவுட் ஹீரோக்களை நினைவுபடுத்துகிறது. கே.கே (கடாரம் கொண்டான்) என்ற கேரக்டராகவே வாழ்ந்துள்ளார்.

வாய் பேசும் வசனங்களை விட, உடல்மொழி அதிகம் பேசியிருக்கிறது. இளம் கர்ப்பிணியின் அன்பையும், ஏக்கத்தையும் பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் அக்‌ஷரா ஹாசன். வில்லன்களிடம் சிக்கித் தவிக்கும்போது உருக வைக்கிறார். அறிமுகம்  என்று தெரியாத அளவுக்கு அபி ஹசன் தன் பங்கை சரியாக செய்துள்ளார். விகாஸ் ஸ்ரீவத்சவ், லீனா குமார் பிரமாதப்படுத்தி இருக்கின்றனர். ஜிப்ரான்  பின்னணி இசையும், ஸ்ரீனிவாஸ் ஆர்.குப்தா ஒளிப்பதிவும் ஹாலிவுட்  தரத்துக்கு இருக்கிறது. விக்ரம் வரும்போது ஒலிக்கும் தீம் மியூசிக் சிறப்பு.

இதுவரை எந்த படத்திலும் காட்டாத அளவுக்கு  மலேசியாவின் பிரமாண்டத்தை படமாக்கியுள்ளனர். தூரத்தில் இருந்து தொடங்கி, ட்வின் டவரின் ஒரு அறைக்குள் செல்லும் ஓப்பனிங் ஷாட் முதல்,  கடைசி கிப்ட் பாக்ஸ் வரை அவ்வளவு நேர்த்தி. தரத்தில்  படத்தை உயர்த்திப் பிடித்தாலும், சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும்  வகையில் எளிமையாக கொடுக்க தவறிவிட்டனர். விக்ரம் யார்? நல்லவரா,  கெட்டவரா என்ற கேள்விக்கு பதில் இல்லை. உயர் அதிகாரி லீனா குமாரின் கொலையை மலேசியா போலீஸ் கண்டுகொள்ளாதது ஏன்? இதுபோல் சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் மனதைக் கவர்கிறான், இந்த கடாரம் கொண்டான்.

Tags :
× RELATED ரசவாதி – தி அல்கெமிஸ்ட் – திரைவிமர்சனம்