
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லியுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரப்புவது கவலை அளிப்பதாக தமன்னா தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடனான திருமணத்துக்கு முன்பு, தமன்னாவுடன் விராட் கோஹ்லி டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவியது. 2010ல் விராட் கோஹ்லி, தமன்னா இணைந்து ஒரு டி.வி விளம்பரத்தில் நடித்ததை தொடர்ந்து இதுபோன்ற வதந்திகள் பரவியது. மேலும், நகைக்கடை திறப்பு விழாவில் தமன்னா, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் பங்கேற்ற போட்டோக்கள் வெளியானதை தொடர்ந்து, உடனே இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு தமன்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
‘விளம்பரத்தில் நடிப்பதற்காக ஒரே ஒருமுறை விராட் கோஹ்லியை சந்தித்தேன். அதற்கு பிறகு அவரை நான் சந்தித்து பேசவில்லை. மேலும், நகைக்கடை திறப்பு விழாவில் அப்துல் ரசாக்கும், நானும் பங்கேற்றது தற்செயலானது. மற்றபடி, அப்துல் ரசாக்கின் வாழ்க்கை என்னவென்று கூட எனக்கு தெரியாது. தினமும் என்னைப் பற்றி வெளியாகும் இதுபோன்ற வதந்திகளை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆதாரமற்ற செய்திகள் எனக்கு அதிக மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. என்றாலும், இவற்றை எல்லாம் கட்டுப்படுத்த முடியாது. மக்கள் என்ன நினைக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதை நினைத்துக்கொள்ளட்டும்’ என்று அவர் கோபத்துடன் பேசியுள்ளார்.
