×

போதை ஏறி புத்தி மாறி - விமர்சனம்

துஷாராவுடன் கல்யாணம் நடைபெற இருக்கும் நிலையில், நண்பர்கள் அர்ஜுனன், ரோஷன், சரத், ஆஷிக், செந்தில் குமரன்  ஆகியோருடன் ஒருநாள் முன்பு பேச்சுலர் பார்ட்டியில் கலந்துகொள்கிறார் தீரஜ். அப்போது மது போதை அதிகமாகி, ரோஷன் தூண்டுதலால் போதை மருந்தையும் அதிகமாக எடுத்துக்கொள்ளும் அவர், மயக்க நிலைக்கு செல்கிறார். அதற்கு பிறகு அந்த அறையில் நடக்கும் தொடர்கொலைகள், அங்குள்ள அனைவரையும் அல்லுசில்லாக்குகிறது. போதை மருந்து கடத்தலை கூடுதல் தொழிலாக செய்யும் போலீஸ் கமிஷனர் அஜய், தமது கும்பலை கண்டுபிடித்து பத்திரிகையில் எழுத துடிக்கும் காதலி பிரதாயினியை கொடூரமாக கொல்கிறார்.

ஆனால், அந்த பழி தீரஜ் மீது விழுகிறது. இதையடுத்து அவரை சிறையில் அடைக்கின்றனர். பார்ட்டியின்போது நடந்த தொடர்கொலைகளிலும், பிரதாயினி கொலையிலும் தீரஜ் எப்படி சம்பந்தப்படுகிறார்? உண்மையிலேயே அவ்வளவு கொலைகளும் நடந்ததா? தீரஜ், துஷாரா திருமணம் நடந்ததா என்பது, எதிர்பாராத கிளைமாக்ஸ். விறுவிறுப்பான சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் தர முயற்சித்து இருக்கிறார், அறிமுக இயக்குனர் கே.ஆர்.சந்துரு. கதைக்கு ஈடுகொடுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார், பாலசுப்பிரமணியெம்.

பெரும்பாலும் ஒரே அறையில் நடக்கும் கதை என்றாலும், காட்சிகளுக்கான கோணங்களின் மூலம் படம் நகர உதவி இருக்கிறார். கே.பியின் பின்னணி இசை பதற வைக்கிறது. அறிமுக ஹீரோ டாக்டரான தீரஜ், தன் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். போதை மருந்தை பயன்படுத்தி மயக்கம் அடைந்த பிறகு ஏற்படுகின்ற மூளையின் ரசாயன மாற்றங்களை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார். டப்பிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். புது ஹீரோயின்கள் பிரதாயினி, துஷாரா இருவருக்கும் அதிக வேலை இல்லை.

என்றாலும், கொடுத்த கேரக்டரை செய்துஉள்ளனர். போலீஸ் அஜய் வில்லனாக வருகிறார். மீரா மிதுன், சார்லி, சுரேகா வாணி போன்றோரும் நடித்துள்ளனர். ஹீரோ பார்வையில் நடக்கும் சில சம்பவங்கள் லேசாக குழப்புவது போன்ற திரைக்கதை என்றாலும் கூட, போதை மருந்துக்கு அடிமையாவதன் மூலமாக ஏற்படும் மாற்றங்களையும், அதனால் தானும் சீரழிந்து, சுற்றியிருப்போரையும் சீரழிக்கும் கொடூரத்தையும் கமர்ஷியல் சமரசங்களின்றி சொன்னவிதத்தில் சற்றே தள்ளாடினாலும், விழாமல் தப்பிக்கிறது படம்.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்