![]()
சென்னை: தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான ‘1: நேனொக்கடினே’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரித்தி சனோன். அதன்பிறகு, ‘ஹீரோபன்ட்டி’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆனந்த் எல் ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் கிரித்தி சனோன் நடத்தும் நிறுவனம் ஒன்று கடந்த 2 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் ‘மெக்காஃபைன்’ என்ற அழகு சாதன நிறுவனத்திற்கு கிரித்தி சனோன் விளம்பரம் செய்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக ‘லெட்ஸ் ஹைபன்’ என்ற தோல் பராமரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதனை பிரபல படுத்தி வந்தார். தருண் ஷர்மா, வைஷாலி குப்தா, விகாஸ் லட்ச்வாணி, மோஹித் ஜெய்ன் ஆகியோருடன் சேர்ந்து இந்நிறுவனத்தை கடந்த 2022ம் ஆண்டு தொடங்கினார். 2 ஆண்டுகளில் இந்நிறுவனம் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதுகுறித்து கிரித்தி சனோன் பேசுகையில், ‘‘அடுத்த 2, 3 ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ.1000 கோடி வருவாய் ஈட்டும். எப்போதும் பெரியளவில் கனவு காண வேண்டும். நல்ல நண்பர்கள் குழுவால் இது சாத்தியமானது. சில நேரங்களில் ஒரு பிரபலத்திடமிருந்து வரும் தயாரிப்புகள் பல விமர்சனங்களை எதிர்கொள்ளும். அதேபோல இந்நிறுவனத்திற்கும் பல விமர்சனம் வந்தது. இதில் வரும் தயாரிப்புகள் அனைத்தும் குவாலிட்டியானவை” என்றார்.
