
சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் பயிற்சி எஸ்ஐ ஆக தர்ஷன், சில மாதங்களில் ஓய்வுபெற இருக்கும் சீனியர் கான்ஸ்டபிள் லால் பணியாற்றுகின்றனர். ஒரு வாரத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அப்பகுதியில் வசிப்பவர்கள் சொந்த துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் சரண்டர் செய்கின்றனர். அதில் சினிமா நடிகர் மன்சூர் அலிகானும் ஒருவர். அவரது துப்பாக்கியை லாக்கரில் வைக்கிறார் லால். அந்த துப்பாக்கி திடீரென்று காணாமல் போகிறது.
அதை தேடும் பணியில் தர்ஷன் ஈடுபடுகிறார். ஏரியா ரவுடி சுஜித் சங்கர், 10 கோடி ரூபாயை தேர்தல் நிதியாக ஒரு அரசியல் கட்சிக்கு கொடுக்கிறார். திடீரென்று பணம் காணாமல் போகிறது. துப்பாக்கியும், பணமும் கிடைத்ததா? இரு சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு என்பது மீதி கதை. முழுநீள கிரைம் சஸ்பென்ஸ் திரில்லரை செம விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இயக்கிய கவுதமன் கணபதிக்கு பாராட்டுகள். தர்ஷன் இயல்பாக நடித்துள்ளார்.
லாலுக்கு உதவ, ரவுடிகளுடன் துணிச்சலாக மோதியிருக்கிறார். மாறுபட்ட வில்லனாக சுஜித் சங்கர், நேர்மையான போலீசாக லால், மனிதநேயம் கொண்ட போலீஸ் அதிகாரியாக அருள் டி.சங்கர் கவனத்தை ஈர்க்கின்றனர். மன்சூர் அலிகான், ரம்யா ராமகிருஷ்ணன், முனீஷ்காந்த், பாடினி குமார், கவுசிக், சுந்தரேஸ்வரன் ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர்.
விகாஸ் படிஷாவின் பின்னணி இசை, காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளது. மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. காவலர்களின் ஈகோ மோதல், தேர்தல் பரபரப்பு, வில்லன் கோஷ்டியின் அலப்பறை மற்றும் துரோகத்தை கவுதமன் கணபதி சிறப்பாக கையாண்டுள்ளார். போலீசார் அனைவருமே வில்லனுக்கு முன் பெட்டிப்பாம்பு மாதிரி அடங்கி இருப்பதாக காட்டுவது நெருடுகிறது.
