×

சுட்டுப் பிடிக்க உத்தரவு - விமர்சனம்

சிறுமி மானஸ்வியின் தந்தை விக்ராந்த். திடீரென்று மானஸ்விக்கு உடல் ரீதியாக மிகப் பெரிய பிரச்னை ஏற்படுகிறது. அதை நிவர்த்தி செய்ய. உடனே ஆபரேஷன் மேற்கொள்ள பல லட்ச ரூபாய் செலவாகும். மகளின் உயிரை காப்பாற்றுவதற்காக, தன் நண்பர்கள்  சுசீந்திரன், ரித்தீஷ் ஆகியோருடன் இணைந்து, தனியார் வங்கி ஒன்றில் கொள்ளை அடிக்கிறார் விக்ராந்த். ஆனால், கொள்ளை திட்டம் சொதப்பலாகி விடுகிறது. போலீஸ் கமிஷனர் மிஷ்கின் தலைமையிலான போலீஸ் மற்றும் அதிரடிப்படை அவர்களை துரத்துகிறது. இதனால் அவர்கள், மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகின்றனர்.

போலீசார் அந்த பகுதியை ரவுண்டப் செய்கின்றனர். மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி சொல்கின்றனர். இந்நிலையில், அந்த பகுதியை வெடிகுண்டு வைத்து தகர்க்கும் திட்டத்துடன் தீவிரவாத கும்பல் ஒன்று பதுங்கி இருக்கிறது. போலீஸ் கொள்ளையர்களை பொறி வைத்து பிடிக்க திட்டமிடுகிறது. அதன்படி அந்த கொள்ளையர்கள் சிக்கினார்களா? தீவிரவாத கும்பல் தன் சதி திட்டத்தை நிறைவேற்றியதா என்பது கிளைமாக்ஸ். படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை, சேசிங் விறுவிறுப்பை தருவது போல் திரைக்கதை அமைத்துஇருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ்  ராயப்பா.

வசனத்தை விட காட்சிகள் அதிகம் பேசுகிறது. எல்லா காட்சியும் பொது இடத்திலேயே நடப்பதால், கடுமையாக உழைத்தது தெரிகிறது.  சுஜித் சாரங் ஒளிப்பதிவு, ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை, தினேஷ்  காசி சண்டை காட்சிகள் ஆகியவை இணைந்து, விறுவிறுப்பான ஒரு படத்தை கொடுத்துள்ளது. நடிப்பில் பேபி மானஸ்வி முதலிடம்  பிடிக்கிறார். காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமி வேடத்தை மிகப் பிரமாதமாக செய்துள்ளார். மகளின் பாசம், உயிர் பயம் என்று, நடிப்பில் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார் விக்ராந்த்.

தவிர சுசீந்திரன், மிஷ்கின் இருவரும்  இயக்குனர்கள் என்பதால், தங்கள் கேரக்டரை புரிந்துகொண்டு, மீட்டர் மீறாமல் நடித்துள்ளனர். அதுல்யா  ரவிக்கு அதிக வேலை இல்லை. காதல் காட்சி இல்லை என்றாலும், ஓரிரு இடத்தில் கடந்து செல்கிறது. ஒட்டுமொத்த படத்தையும் திருப்பி போட்டு அதிர வைக்கும் கிளைமாக்ஸ் திருப்பம், ஆச்சரியம் மட்டுமின்றி அதிர்ச்சியும் தருகிறது. ஏகப்பட்ட லாஜிக் கேள்விகள் அணிவகுத்து நிற்கிறது என்றாலும், கதை ஏற்படுத்திய பரபரப்பும், விறுவிறுப்பும் கேள்விகளை மறைத்துவிடுவதால், ஆக்‌ஷன் திரில்லராக திருப்தி தருகிறது படம்.

Tags :
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்