×

வெள்ளைப்பூக்கள்

அமெரிக்காவில் காதல் திருமணம் செய்து, தன் மனைவியுடன் வசிக்கும் தனது மகன் வீட்டுக்கு செல்கிறார், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி விவேக். அங்கு அவரது நண்பராக அறிமுகமாகிறார் சார்லி. திருமண வாழ்க்கை சரியாக அமையாததால், மனம் வெறுத்து வாழும் மகள் பூஜா தேவரியாவின் வீட்டில் தங்கியிருக்கிறார், சார்லி. மகன் வீட்டுக்கு விவேக் சென்ற ஓரிரு நாட்களில், பக்கத்து வீட்டு பெண், இளைஞன் ஆகியோர் மர்ம நபர்களால் பலமாக தாக்கப்பட்டு கடத்தப்படுகின்றனர். ஓய்வுபெற்ற நிலையிலும் கூட, போலீஸ் மூளை வேகமாக செயல்பட ஆரம்பிக்கிறது. அந்த குற்றச்செயலுக்கு காரணமானவர்களை தானாக முன்வந்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறார், விவேக். அவருடன் இணைந்து சார்லியும் துப்பறிகிறார். குற்றவாளி யார் என்று நெருங்கும்போது, விவேக்கின் மகன் தேவ் கடத்தப்படுகிறார். இதையடுத்து விவேக் மேலும் சீரியசாகி, குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் வேகம் காட்டுகிறார். தொடர்ச்சியாக அவர்களை கடத்தியது யார்? கடத்தலுக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்கிறார். இறுதியில், குற்றவாளி யார் என்று தெரியும்போது அதிர்ச்சி அடைவது விவேக் மட்டுமல்ல, ரசிகர்களும்தான்.

விவேக் தனது வழக்கமான டைமிங் காமெடி கலந்து, கதையின் நாயகனாக பொறுப்புடன் நடித்துள்ளார். தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் காதல் திருமணம் செய்துகொண்ட மகனின் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்துவதும், வெளிநாட்டு மருமகளை ஒதுக்கி வைப்பதும், மகன் கடத்தப்பட்ட பிறகு தனிமையில் சத்தம் போட்டு அழுவதுமாக, ஒரு அப்பாவாக நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார். நண்பராக வரும் சார்லியும் அவருக்கு ஈடுகொடுத்து சிறப்பாக நடித்துள்ளார். ஹாலிவுட் நடிகை பெய்ஜ் ஹெண்டர்சனின் நடிப்பு அபாரம். தனது மாமனார் விவேக்கை பாசத்துடன் ‘அப்பா, அப்பா’ என்று சொல்லி வலம் வருவது, அவரது புறக்கணிப்பால் மனம் கலங்குவது என்று, நடிப்பில் நெகிழ வைக்கிறார். பூஜா தேவரியாவுக்கு அதிக வேலை இல்லை. விவேக் மகனாக வரும் தேவ், வெளிநாடு வாழ் இளைஞனை நன்கு பிரதிபலித்துள்ளார். கடத்தல் மற்றும் கொலையாளி களை நெருங்கும்போது ஏற்படும் முடிச்சுகளும், அவற்றை எல்லாம் விவேக் தனது போலீஸ் புத்தியைக் கொண்டு அவிழ்ப்பதுமான திரைக்கதை அதிக சுவாரஸ்யத்தையும், சஸ்பென்சையும் தருகிறது. கொலை செய்தது இவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தை அனைவர் மீதும் தெளித்துவிட்டு, கடைசியில் யாரும் எதிர்பாராத ஒருவராக இருப்பது, நேர்த்தியான ஒரு சஸ்பென்ஸ் திரில்லருக்கு இலக்கணம். இதில் அது கச்சிதமாக கையாளப்பட்டு இருக்கிறது. நெரிசலான சென்னை மாநகரில் வாழ்ந்துவிட்டு, அமைதிநிறைந்த அமெரிக்காவில் போய் இறங்கும் சீனியர் சிட்டிசன்களின் மனஓட்டத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறது படம். ஜெரால்ட் பீட்டரின் ஒளிப்பதிவு அமெரிக்காவின் சியாட்டில் அழகையும், அதன் இன்னொரு கோரமுகத்தையும் காட்டியுள்ளது. ராம்கோபால் கிருஷ்ணராஜுவின் இசை, காட்சிக்கான விறுவி றுப்பை அதிகரித்து இருக்கிறது. கொலையாளியின் பிளாஷ்பேக் நடப்புக் கதையுடன் இணைந்தே வருவதாலும், அது பிளாஷ்பேக் என்று தெரியாததாலும், ஒரு சின்ன குழப்பம் ஏற்படுகிறது. அமெரிக்காவில் குற்றம் நடக்கும் இடங்களில் எல்லாம் இதுபோல் வெளியாட்கள் மிகச் சுதந்திரமாக நடமாட முடியுமா? ஆங்காங்கே குறை இருந்தாலும், விறுவிறுப்பான துப்பறியும் நாவலை படமாக்கியது போல், அமெரிக்கா இளைஞர்கள் இணைந்து வெள்ளைப்பூக்களை உருவாக்கி இருக்கின்றனர். படத்தின் முக்கிய காரணியாக டாண்டலியன் என்ற வெள்ளைப்பூ இருக்கிறது.

Tags : Vellaippukkal ,
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...