×

திருக்குறள் சொல்லும் உயிர்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

குறளின் குரல்


உயிர் என்ற ஒன்று உண்டா என்பதைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் தொடர்ந்து நிலவி வருகின்றன. சில அறிவியலாளர்கள் அப்படித் தனியே ஒன்றும் இல்லை என்றும், உடல் இயக்கமற்றுப் போவதே மரணம் என்றும் கூறுகின்றனர். ஆனால், பல்லாண்டு காலமாக ‘உயிர் என்ற ஒன்று உண்டு. அது உடலோடு இணைந்து வாழ்கிறது. அதைப் பிரித்தால் உடல் செயலற்றுப் போய்விடுகிறது. உடலை விட்டு உயிர் பிரிதலே மரணம்’ என்ற கருத்தோட்டம் நிலவி வருகிறது. உயிர் பற்றி, மறுபிறவி பற்றியெல்லாம் பலவகை ஆராய்ச்சிகளும் நடக்கின்றன. சென்னை அடையாறில் உள்ள பிரம்மஞான சபை, உடலை விட்டுப் பிரிந்த உயிரின் அடுத்த கட்டம் என்ன என்பதைத்தான் ஆய்வு செய்கிறது.

திருவள்ளுவர் உயிர் உடலோடு கட்டப்பட்டிருக்கிறது என்றும், உயிர் பிரிதலே மரணம் என்றும் கருதுகிறார். உயிரின் இருப்பை அவர் ஒப்புக்கொள்கிறார்.உடலைப் பிரிந்த உயிர், பின்னர் மறுபிறவி எடுக்கிறது என்பதையும்கூட வள்ளுவம் ஒப்புக் கொள்கிறது. கடவுளைப்பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத மகான் புத்தர்கூட, மறுபிறவி உண்டு என்கிறார். எனவே, உயிரின் இருப்பை அவரும் ஒப்புக்கொள்கிறார். திருவள்ளுவர், உயிர் என்ற சொல்லையே பல்வேறு குறட்பாக்களில் பயன்படுத்துகிறார்.

‘புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.’

(குறள் எண் 183)

புறங்கூறிப் பொய்யாக நடந்து, உயிர் வாழ்தலை விடவும் இறந்துவிடுதல் அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரக்கூடியது.

‘மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
 தன்னுயிர் அஞ்சும் வினை.’

(குறள் எண் 244)

உலகில் வாழும் மற்ற உயிர்களைப் போற்றி அனைத்தின் மேலும் அருள் உடையவனாக வாழ்பவனுக்குத் தன் உயிரின் பொருட்டு அச்சத்தோடு வாழ்கின்ற நிலை நேராது.

‘அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.’

(குறள் எண் 259)

வேள்வித் தீயில் நெய் முதலியவற்றைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதைவிட ஓர் உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பது நல்லது.

‘தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.’

(குறள் எண் 268)

தவ வலிமை காரணமாக தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று இவை நீங்கப் பெற்றவனை இந்த உலகில் உள்ள மற்ற உயிர்கள் எல்லாம் தொழும்.

‘உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.’

(குறள் எண் 330)

வியாதி நிறைந்த உடம்புடன் இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறவியில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர்கள் என்று அறிஞர் கூறுவர்.

‘குடம்பை தனித்தொழியப் புட் பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.’

(குறள் எண் 338)

உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு கூட்டை விட்டுப் பறவை பறந்தாற் போன்றது.

‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.’

(குறள் எண் 969)

தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிரையே விட்டுவிடும் கவரிமானைப் போன்றவர் தங்கள் மானம் அழிய நேர்ந்தால் தங்கள் உயிரை விட்டுவிடுவர்.

‘நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
 நாணினை நீக்கி நிறுத்து.’

(குறள் எண் 1132)

‘காதலியின் பிரிவால் ஏற்பட்ட துன்பத்தைப் பொறுக்காத என் உடம்பும் உயிரும் நாணத்தை விட்டுவிட்டு மடலேறத் துணிந்தன’ என்கிறான் தலைவன். உயிரை ஓர் உடலிலிருந்து இன்னோர் உடலுக்குச் செலுத்துவதும், அப்படிச் செலுத்தப் பட்ட உயிரை மீண்டும் பழைய உடலுக்கே கொண்டு வருவதும் சாத்தியமா? சாத்தியமே என்கிறது நம் ஆன்மிகம். இது ஓர் அரிய கலை. இதைக் ``கூடுவிட்டுக் கூடு பாய்தல்” அல்லது ``பரகாயப் பிரவேசம்” என்கிறார்கள். சித்தர்கள் இந்தக் கலையில் வல்லவர்களாக இருந்து அதைத் தங்கள் வாழ்வின் சில சந்தர்ப்பங்களில் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.

அமருகன் என்ற மன்னன் வேட்டையாட வந்தபோது காலமானான். அவன் உடலில் தன் உயிரைப் புகுத்தி அமருகனாக எழுந்தார் ஆதிசங்கரர். அமருகனின் அரண்மனைக்குச் சென்றார். ஆதிசங்கரரின் பழைய உடல் ஒரு மரப் பொந்தில் பாதுகாக்கப்பட்டது. அந்த உடலில் நெருப்புப் பற்றிக்கொண்டபோது ஆதிசங்கரர் ஞான திருஷ்டியால் அதை அறிந்து தன் உயிரை அமருகன் உடலிலிருந்து பிரித்து மீண்டும் தம் உடலுக்குள் புகுத்தி எழுந்தார். அதற்குள் அவரது வலக்கரம் எரிந்துவிட்டது.

‘லட்சுமி நரசிம்மரே! எனக்குக் கைகொடுப்பாய், லட்சுமீ நரசிம்ம மம தேஹி கராவலம்பம்!’ என்று நரசிம்மர் மீது தோத்திரம் பாடி அவர் மறுபடியும் வலக்கரம் வளரப் பெற்றார் என்கிறது ஆதி சங்கரர் வரலாறு. இது மனித உடலிலிருந்து மனித உடலுக்கு உயிரை மாற்றிய சரிதம். இந்தச் சரிதத்தில் பழைய மனிதஉடல் மீண்டும் உயிர் பெறும் வரை காப்பாற்றப் பட்டு விட்டது. ஆனால், திருமூலரின் சரித்திரத்தில் பழைய உடல் சிங்கத்தால் உண்ணப்பட்டுவிட்டது. மாடு மேய்க்கும் மூலன் கானகத்தில் இறந்து கிடக்கிறான். மாடுகள் சுற்றிநின்று கண்ணீர் வடிக்கின்றன. அந்தக் காட்சி முனிவர் சுந்தரநாதரின் மனத்தை உருக்குகிறது.

மாடுகளின் துன்பத்தை மாற்றி அவற்றை அதற்குரிய இடத்தில் கொண்டு சேர்க்கத் திருவுளம் கொள்கிறார் அவர். தன் உயிரைத் தன் உடலிலிருந்து பிரித்து மூலன் உடலில் செலுத்தி மூலனாக எழுகிறார். மகிழ்ச்சியோடு மாடுகளே வழிகாட்ட அவற்றை அவற்றுக்குரிய கொட்டடியில் அடைத்துவிட்டு அவர் திரும்பியபோது அவர் உடலைக் காணவில்லை. அவர் தன் புதிய உடலிலேயே வாழவேண்டிய கட்டாயம் நேர்கிறது என்கிறது திருமூலர் சரிதம். அருணகிரிநாதர் சரித்திரத்தில் அவர் தன் உடலிலிருந்து உயிரை நீக்கி ஒரு கிளியின் உடலில் தன் உயிரைச் செலுத்துகிறார். ஆனால், அவரின் பழைய உடல் எதிரிகளால் எரிக்கப்பட்டுவிடுகிறது.

அருணகிரிக்கிளி கயிலாயத்திற்குப் பறந்து சென்றதாகவும் அந்தக் கிளியைத்தான் அன்னை மீனாட்சி தன் கையில் ஏந்திக்கொண்டாள் என்றும் அந்த வரலாறு சொல்கிறது. அருணகிரிக் கிளி, தான் எழுதிய திருப்புகழைப் பாட, தன் மகன் முருகனின் பெருமையை அந்தக் கிளி மூலம் ஓயாமல் கேட்டு மகிழ்கிறாளாம் அன்னை மீனாட்சி. பாசக் கயிறு வீசி உடலிலிருந்து உயிரை வலுக்கட்டாயமாகப் பிரித்து எடுத்துச் செல்பவன் எமன் என்று நம் புராணங்கள் சொல்கின்றன. அப்படி எமன் சத்தியவானின் உடலிலிருந்து உயிரை எடுத்துச் சென்றபோது தன் தவச்சக்தியால் போராடி அந்த உயிரை மீட்டாள் சாவித்திரி என்கிறது சத்தியவான் சாவித்திரி திருச்சரிதம்.

அந்தச் சரிதத்தை ஓர் உருவகக் கதையாகக் கொண்டு மகான் அரவிந்தர் சாவித்திரி என்ற தலைப்பில் ஓர் ஒப்பற்ற ஆங்கிலக் காப்பியத்தை எழுதியிருக்கிறார். தன்னைச் சரணடைந்த மார்க்கண்டேயனின் உயிரை எமன் பறித்துச் செல்லாமல் மார்க்கண்டேயனைக் காத்தார் சிவபெருமான் என்ற செய்தியைத் தருகிறது மார்க்கண்டேய புராணம்.

உடம்பைச் சார்ந்தே உயிர் உள்ளது என்று கருதுகிறார் திருமூலர். உடம்பு பலவீனமடைந்து அழிந்தால் உயிரும் அழியும். அப்போது மெய்ஞ்ஞானம் கிட்டாது. உடம்பைச் சிறப்பாகப் பராமரித்தால் உடம்பும் வளரும். அதன் உள்ளிருக்கும் உயிரும் வளரும். எனவே ‘உயிரை வளர்க்க வேண்டி, உடம்பை நல்ல முறையில் பராமரித்தேன்’ என வாக்குமூலம் தருகிறார் அவர்.

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே!’


மழைக் காலத்தில், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி ஒருத்தி, தன்னை உடல் என்றும் தலைவனை உயிர் என்றும் எண்ணி வருந்துகிறாளாம். அந்தத் தலைவியின் நிலையை அழகாகச் சித்திரிக்கிறது நந்திக் கலம்பகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல்:

‘மங்கையர்கண் புனல்பொழிய மழை
பொழியும் காலம்
மாரவேள் சிலைகுனிக்க மயில்குனிக்கும் காலம்
கொங்கைகளும் கொன்றைகளும் பொன்சொரியும் காலம்
கோகனக நகைமுல்லை முகைநகைக்கும் காலம்
செங்கைமுகில் அனைய கொடைச் செம்பொன்பெய் ஏகத்
தியாகியெனும் நந்தியருள் சேராத காலம்
அங்குயிரும் இங்குடலும் ஆனமழைக் காலம்
அவரொருவர் நாமொருவர் ஆனகொடுங் காலம்!’


வள்ளலார் உடலும் உயிரும் ஒன்றோடொன்று இணைத்துக் கட்டப்பட்டுள்ளன என்றே கருதுகிறார். உயிரை உடலோ உடலை உயிரோ மறப்பதில்லை. அப்படி மறந்தால் நிகழ்வது மரணம்தான். ‘உயிர் உடலையும் உடல் உயிரையும் மறந்துபோனால் கூட, நான் நமச்சிவாயத்தை மறக்க மாட்டேன்!’ என்கிறார் வள்ளல் பெருமான்.

‘பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந்தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமசிவாயத்தை நான் மறவேனே!’


ஆழ்ந்த காதல் கொண்டுள்ள தலைவன் தலைவியைப் பற்றிச் சொல்லும்போது அவர்கள் ஈருடலும் ஓருயிருமாக வாழ்ந்தனர் என்று சொல்லும் வழக்கமும் இருக்கிறது. ஆனால் இது கற்பனையே அன்றி வேறல்ல. இரண்டு உடல் களில் ஒரே உயிர் இருப்பது சாத்தியமில்லை. ஒருவனின் உயிர் அவன் உடலில் அல்லாது ரகசியமாய் வேறிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் பல பழைய கதைகள் பேசுகின்றன. ஓர் அரக்கனைக் கொல்ல வேண்டுமானால் அவனை அம்பு செலுத்திக்கொல்ல முடியாது. அவன் என்ன செய்தாலும் இறக்க மாட்டான்.

ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி அவன் உயிர் ஏதேனும் ஒரு குகையில் ஒரு குடுவையில் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருக்கும். அதைக் கண்டுபிடித்து அழித்தால்தான் அவன் இறப்பான் என்பதுபோன்ற கற்பனை முந்தைய பழங்கதைகளில் உண்டு. கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உயிர் என்ற ஒன்று உண்டு என்பதை ஆதாரமாகக் கொண்டே இக்கதைகள் புனையப்பட்டுள்ளன. திரைப்பாடல்கள் பலவற்றில் உயிர் பற்றிய பேச்சு இருப்பதைப் பார்க்கிறோம். கற்பகம் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி எழுதி விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் பி. சுசீலா குரலில் ஒலித்த பாடல் ‘மன்னவனே அழலாமா?’ என்ற பாடல். அது உயிரைப்பற்றிக் கூறுகிறது.

‘மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க.....
என்னுடலில் ஆசையென்றால் என்னை நீ மறந்துவிடு
என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழவிடு!


‘உயிரே உயிரே’, ‘உன்னுயிர் நான்தானே...’ என்றெல்லாம் காதலன் காதலி இருவரும் ஒருவரையொருவர் உயிர் எனக் குறிப்பிட்டுக் கொள்ளும் திரைப்பாடல்கள் பல உண்டு.
முத்துராமன், சரோஜாதேவி நடித்து உயிர் என்ற தலைப்பிலேயே ஒரு திரைப்படம் வந்துள்ளது. உயிர் என்பது குறித்து இன்றளவும் சரியான அறிவியல் விளக்கங்கள் இல்லை. ஆனால் ஆன்மிகம் உயிரைப் பல கோணங்களில் விளக்குகிறது. திருவள்ளுவர் உயிர்க் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார்.

திருக்குறளை நாம் உயிருக்குயிராக நேசித்து, வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நெறியை உயிரினும் மேலாகக் கருதிப் பின்பற்றுவோமானால், நாம் வாழும் வாழ்வு பொருள் பொதிந்ததாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

(குறள் உரைக்கும்)


திருப்பூர் கிருஷ்ணன்

Tags : Thirukkural ,
× RELATED திருக்குறளில் வேள்வி!