ஒரு அடார் லவ்

‘மாணிக்க மலரே பூவி’ என்ற பாடலில் பிரியா பிரகாஷ் வாரியர் புருவம் சிமிட்டியதையும், விரல்களை துப்பாக்கியாக்கி சுடுவதையும் வீடியோவில் உலகம் முழுக்க பார்த்து ரசித்தவர்கள், சமூக வலைத்தளங்களில் இந்தக் காட்சிகளை மில்லியன் கணக்கில் வைரலாக்கினர். பல மொழிகளில் வெளியான இப்படம், தமிழிலும் திரைக்கு வந்துள்ளது. துள்ளித்திரியும் பருவ வயதினரின் பள்ளி வாழ்க்கை, காலத்தால் மறக்க முடியாதது. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி பிரியா பிரகாஷ் வாரியருக்கும், மாணவன் ரோஷன் அப்துல் ரஹுப்புக்கும் முதலில் மோதலில் ஆரம்பிக்கும் சந்திப்பு, பிறகு நட்பாகி, அதற்கு பிறகு காதலாகிறது. சக மாணவ, மாணவியர் துணையுடன் கலகலப்பாக செல்லும் அவர்கள் வாழ்க்கையில், திடீரென்று புயல் தாக்குகிறது.

பள்ளியின் நிகழ்ச்சிகளை பகிர்ந்துகொள்ள ஆரம்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில், ரோஷனுடைய நண்பன் தவறுதலாக சில ஆபாச வீடியோக்களை போஸ்ட் செய்துவிட, பள்ளி முழுக்க அந்த பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. பிரின்சிபால் முன்பு விசாரணைக்கு நிற்கும் ரோஷன், தன் நண்பனை காட்டிக்கொடுக்க மனமின்றி, பழியை தன்மேல் சுமக்கிறார். இதனால், அவரை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுகிறார் பிரின்சிபால். இதையறிந்து கடுப்பாகும் பிரியா, ‘இதுக்கு பிறகும் உன்கூட நான் இருந்தா, என்னையும் தப்பா பேசுவாங்க’ என்று, லவ் பிரேக்அப் ஆனதாக சொல்லி விட்டு விடைபெறுகிறார்.

இந்நிலையில் நண்பர்கள் கொடுத்த ஆலோசனைப்படி, மாணவி நூரின் ஷெரீப்பை காதலிப்பது போல் ரோஷன் நடித்து, பிரியாவை வெறுப்பேற்றி மீண்டும் தன் பக்கம் இழுக்க முயல்கிறார். ஆனால் நூரின், ரோஷனை உண்மையாகவே காதலிக்க தொடங்குகிறார். இதையறிந்த ரோஷனும் நூரினை காதலிக்கிறார். இருவரது காதலை அறிந்த பிரியா என்ன முடிவு செய்கிறார்? பிறகு ரோஷனும், நூரினும் இணைந்தார்களா என்பது எதிர்பாராத முடிவு.
தமிழில் 1980கள் மற்றும் 1990களில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் காதலை மையமாக வைத்து வெளியான படங்களின் பாணியில் வந்துள்ள இப்படம், காதலை மட்டுமே முழுமையாக பேசி இருக்கிறது.

பிரியா, ரோஷன் ஜோடி ரொம்ப பிரெஷ்ஷாக இருக்கிறது. புருவ சிமிட்டல், விரல்களை துப்பாக்கியாக்கி சுடுவது, ரோஷனுடன் லிப்லாக் என, இளைஞர்களுடைய இதயத்துடிப்பை அதிகரிக்கிறார் பிரியா. காதலனின் நாட்டம் இன்னொரு பெண் மீது திரும்பியதை அறிந்து, ‘என்னைவிட அவதான் உனக்கு செட் ஆவா’ என்று மனதை தேற்றுவது, பக்குவமான நடிப்பு. மாணவனின் குறும்புகளை இயல்பாக வெளிப்படுத்தும் ரோஷன், காதல் காட்சி
களில் புகுந்து விளையாடி இருக்கிறார். நூரின் சாந்தமான பெண்ணாக வந்து, ரோஷனின் காதலுக்கு உதவி செய்து, பிறகு அவரை காதலித்து, கிளைமாக்சில் ‘உச்’ கொட்ட வைக்கிறார்.

தவிர மாணவ, மாணவிகளாக தோன்றும் அனைவரும் இயல்பாக கலாய்த்து நடித்துள்ளனர். சினு சித்தார்த்தின் கேமரா, பள்ளி காம்பவுண்டுக்குள் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் நேரில் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. ஷான் ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகி இருப்பதால், படத்தில் பார்க்கும்போது கூடுதல் ரசனையை கொடுக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகள் படிப்பு தவிர மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது போன்ற கதை அமைப்பு நெருடலாக இருக்கிறது. கிளைமாக்சில் இவ்வளவு கனம் தேவையா என்பதை இயக்குனர் ஒருமுறையாவது யோசித்து இருக்கலாம்.

× RELATED கொஞ்சம் விட்டால் செருப்பும் விற்பார்! மம்தா ஆதங்கம்