×

மங்களம் அருளும் மதுரை மீனாட்சி

* மதுரை மீனாட்சியம்மன் கோயிலானது உலக அதிசயப் பட்டியலுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அற்புத ஆச்சர்யங்கள் கொண்ட ஆன்மிகத் தலமாகும்.  

* பதினேழு ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்திருக்கிற இக்கோயில் ஆதியில் இந்திரனால் கட்டப்பட்டதென்கின்றனர். தனக்கு ஏற்பட்ட கொலைப்பாவமான ‘பிரம்மஹத்தி தோஷம்’ நீங்க பல தலங்களுக்குச் சென்று வந்த இந்திரன், கடம்பவனக் காட்டுப் பகுதிக்கு வந்தபோது, சுயம்புவாகத் தோன்றியிருந்த லிங்கத்தை வழிபட்டு, சிவபெருமானின் அருள் பெற்றதும், இங்கேயே சிறு கோயில் நிர்மாணித்ததும், திருவிளையாடற் புராணத்தால் தெரியவருகின்றன.

* பாண்டிய இளவரசியாக அன்னை மீனாட்சி அவதரித்ததையும், பிறகு சுந்தரேஸ்வரரான சிவபெருமானை மணமுடித்ததையும் தலவரலாறு தெரிவிக்கிறது.

* மதுரை மன்னர் திருமலை உள்ளிட்ட பலராலும் இந்த தலத்தின் முக்கிய பகுதிகள் அழகுற எழுப்பப்பட்டு, உயர சுற்றுச்சுவருடன், விண்ணை முட்டும் நான்கு கோபுர வாயில்களும், அதனுள்ளே எட்டு சிறிய கோபுரங்களும் அமைந்து இந்த தலம் ‘கோயில் மாநகரம்’ என்ற அடைமொழியையும் மதுரைக்குத் தந்திருக்கிறது.

* பாண்டியர், நாயக்கர் கால மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என அம்மன் - சுவாமிக்கு  பலரும் தங்கம், வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், புஷ்பராகத்தில்  ஆபரணங்கள் செய்து காணிக்கையாக கொடுத்துள்ளனர்.

* 1972-ல் திருப்பணி நடந்தபோது மீனாட்சிக்கு புது வகையான  வைரகிரீடம் உருவாக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டது.
   
* இந்தக் கோயிலின் கிழக்கு கோபுர நடுவில் இருந்து, மேற்கு கோபுரத்திற்கு ஒரு கோடு கிழித்தால், அது சரியாக சிவலிங்கத்தின் நடு உச்சி வழியாகப் போகும். அதேபோல  வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டு பார்த்தால், அது சுவாமி சந்நதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும்.

* பூஜை செய்வதற்காக, ஆலயக் குளத்தில் பொற்றாமரைகள் பூத்துப் பெருகிய விவரமும் அறிய முடிகிறது.

* நான்கு திசைகளிலும் எழிலார்ந்த கோபுரங்கள் கோயில் வாயில்களாகவே திகழ்கின்றன என்றாலும், மீனாட்சி அம்மன் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பதால், கிழக்கு கோபுரத்தை கைகூப்பி வணங்கியபடி உள்ளே நுழைவது மரபாகும்.

* நுழைந்ததும் எதிர்ப்படுகிறது அட்டசக்தி மண்டபம். அதாவது எட்டு சக்திகளுக்கான மண்டபம். இடப்புறத்தில் கௌமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி எனவும் வலப்புறம் யக்ஞாரூபிணி, சியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி எனவும், இருபுறமும் எட்டு அம்பிகைச் சிற்பங்களைத் தரிசிக்கலாம்.
 
* 165 அடி நீளம், 120 அடி அகலமிக்க இந்த குளத்தைச் சுற்றி, நாலாபுறமும் தூண்களுடன் கூடிய பிராகாரங்கள் அமைந்திருக்கின்றன.
 
* இதன் தென்புறத்தில்தான் திருக்குறள் அரங்கேற்றம் கண்டிருக்கிறது என்கிறார்கள். இந்த மேன்மையைப் போற்றிடும் வகையிலேயே பிராகாரச் சுவரில் 1330 குறள்களையும் எழுதி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

* சிவபெருமானால் 64 திருவிளையாடல்களில் சிலவாகிய வெள்ளை யானையின் சாபம் தீர்த்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்குப் பொற்கிழி அளித்தது, நக்கீரனைக் கரை ஏற்றியதுடன், இலக்கணம் உபதேசித்தது ஆகியவற்றுடன் இந்தப் பொற்றாமரைக் குளத்திற்கு தொடர்பிருக்கிறது.  

* பொற்றாமரைக் குளத்தில் மீன் வசிப்பதில்லை. மீனாக விழித்திருந்து, மக்களை மீனாட்சி காப்பதாகிய அதிசயத் தத்துவத்தை விளக்குவதுபோல! சிறிதுநேரம் குளக்கரைப் படிக்கட்டில் அமர்ந்து தென்றல் வருடலோடு, ஆன்மிக உணர்வு மேலோங்க, ஓய்வெடுக்கலாம்.

* மதுரை மீனாட்சியம்மன் கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருவிளையாடல் காட்சிகளை விவரிக்கும் ஓவியங்கள் நிறைந்துள்ளன. செட்டி நாட்டு கலை பாணியிலான 97-அடி நீளம், 47-அடி அகலத்தில் பெரியதொரு கூடத்தில், இந்த ஓவியங்களைப் பார்வையிடலாம்.

* மதுரை மீனாட்சி கோயிலுக்குள் 999 தூண்கள் கொண்டிருக்கிற மண்டபத்தை ஆயிரங்கால் மண்டபம் என்றே அழைக்கின்றனர்.

* மீனாட்சியான பார்வதி தேவியாருக்கு, தடாதகைப் பிராட்டி, அபிஷேகவல்லி,  கற்பூரவல்லி, மரகதவல்லி, சுந்தரவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி,  குமரித்துறையவள், கோமகள், பாண்டி பிராட்டி, மாணிக்கவல்லி, மதுராபுரித்  தலைவி, முதுமலைத் திருவழுதிகள் என ஏராளமான திருப்பெயர்கள் உள்ளன.  

* கிளிக்கூண்டு மண்டபத்து சித்தி விநாயகரையும், முருகரையும் வணங்கி, அம்மன் திருச்சந்நதியின் முன் உள்ள பலிபீடத்தை வலம்வந்து, மீனாட்சியம்மனை தரிசிப்பதற்கான பிரதான வாயிலுக்குள் நுழையலாம். இரண்டாம் பிராகாரத்தை வலம் வரும்போது கிழக்குப் பகுதியில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலையையும், மேற்குப் பகுதியில்  கொலு மண்டபத்தையும் கண்டு வியக்கலாம்.

* கொடிமரத்தைக் கடந்து ஆறுகால் பீடத்தை அடையலாம். இங்குதான் குமரகுருபரர், ``மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழை’’ அரங்கேற்றம் செய்திருக்கிறார் என்ற தகவல் சிலிர்க்கவைக்கிறது. அவர், மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழை உரத்து வாசிப்பதையும், அதை மன்னர் உட்பட, கற்றோரும், ஆன்றோரும், பொதுமக்கள் அனைவரும்  முன்னமர்ந்து மனமுருகி கேட்பதையும் மனக்காட்சியால் கண்டு நெகிழலாம்.

* மூலத்தானத்தின் தென்பகுதியில் உச்சிஷ்டர், கூத்தர் என இரட்டை விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். இங்கே ஒவ்வொரு சந்நதியிலும் முதன்மையாக விநாயகர் இருக்கிறார். விநாயகரே, விநாயகரை வணங்கித் துவக்கும் தத்துவமாக இந்த ‘இரட்டை விநாயகர்’ இருக்கின்றனர்!
 
* மீன் போன்ற கண்களை உடையவள் என்ற பொருளில் இறைவி ‘மீனாட்சி’ எனப்படுகிறாள். மீன் தன் பார்வையால் முட்டைகளை பொரியச்செய்து பின் பாதுகாத்தும் வரும் கருணையைப் போலவே, உலக மக்களுக்கு தன் அருட்பார்வையில் நலம் தருவாள் எனும் நயமும் இதில் அடங்கியிருக்கிறது. கண் துஞ்சாமல் மீன் இரவு, பகல் விழித்துக்கிடப்பது போலவே இந்த மதுரை, தேவியும் கண்ணிமைக்காது உலகைக் காத்து வருகிறாள் என்று பொருள்.

* ஆயகலைகளின் முழுவடிவாகிய கிளியை மீனாட்சியம்மன் தன் திருக்கரத்தில் ஏந்தி நிற்கிறாள். பக்தர் அம்மனிடம் கோரிக்கையை தெரிவிக்கிறார், அதை கவனமாகக் கேட்கும் கிளி, அதை திரும்பத் திரும்ப அம்மனுக்குச் சொல்லி, பக்தர் துயர்களைய அந்தக் கிளி உதவுகிறதாம்!

* கோயில் ஸ்டால்களில் ‘புட்டு பிரசாதமும்’  கிடைக்கிறது. திருவிளையாடல் புராணத்தில், புட்டுக்கு மண் சுமந்த ஈசன் கதையை  நினைவுறுத்தும் வகையில் தரமாக புட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்குப்  பிரசாதமாகத் தருகின்றனர்.

* மீனாட்சியம்மனை வணங்கிய பிறகு, வடபுறம் சண்டிகேஸ்வரியையும், பள்ளியறையையும் தரிசித்து அருகில் உள்ள வாயில் வழியாக சுவாமி கோயிலின் 2ம்  பிராகாரத்தை அடையலாம்.

* நடுக்கட்டு கோபுர மாடத்திலிருக்கும் மடைப்பள்ளியில் கிடைக்கும் சாம்பலை எடுத்து திருநீறாக பாவித்து, அணிந்து முன்வினைகளை நீக்க வேண்டிக் கொள்ளலாம்.

* தமிழ் மண்ணின் வாசமாய் இன்றளவும் மதம் கடந்த மனிதம்  நிமிர்ந்து நிற்கிறது. இவ்வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ளும்  ஒரு காலத்தில் மசூதி இருந்த அடையாளமாக மொகலாயர் பாணி விமானத்துடன் கூடிய  ஒரு மண்டபம் எஞ்சி நிற்கிறது.

* மதுரையில் சங்கம் வைத்து தமிழ் மணம் பரப்பிய மகத்துவத்தை உணர்த்தும் விதத்தில், இங்கே ‘சங்கத்தார் சந்நதி’ இருக்கிறது.
* ஏதேனும் தடை அல்லது ஜாதகக் கோளாறு காரணமாக திருமணம் நடைபெறாது வருந்தும் அன்பர்கள், இங்குள்ள திருக்கல்யாண சுந்தரரை வணங்கலாம். இவரை உளமாற வணங்கிச் சென்றால், விரைவில் திருமணபந்தம் ஏற்பட்டு மனமகிழ்வர்.

* தலவிருட்சமான கடம்பமரம் வித்தியாசமாகக் காட்சி தருகிறது. பல்லாண்டுகளாகிப்போன இந்த மரம், கல்லாக உறைந்திருக்கிறது! ஆனால் மீனாட்சியம்மன் கோயிலின் தலமரம் என்பதற்கு சாட்சியாக வடக்கு கோபுர உள்வாசல் பகுதியில் கிளைகளுடன் கடம்ப மரம் இலை பரப்பி பசுமை பொலிய நின்றிருக்கிறது.

* தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் அக்கினி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர், காளி என தத்ரூபமான சிற்பங்கள் நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்கின்றன.

* ஊர்த்துவதாண்டவமூர்த்தி சிற்பத்திற்குக் கீழே காரைக்கால் அம்மையார் சிற்பம் இடம் பெற்றுள்ளது. ‘பிறவாமை வேண்டும், இனிப் பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும்’ என்ற பிரார்த்தனையுடன் பிறர் யாரும் விரும்பவொண்ணா வகையில் பேயுருவம் கொண்டார்.

* தென்புறத் தூணில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். அவருக்கு வெண்ணெய் சாத்தி, திலகமிட்டு, பக்தர்கள் வணங்குகிறார்கள்.

* நிறைவாக கொடிமரத்தருகே வந்து வடக்கு நோக்கி சாஷ்டாங்கமாக தரையில் வீழ்ந்து நமஸ்கரிக்கலாம்.

* கிழக்குக் கோபுர வாசல் வழி ஆயிரங்கால் மண்டபம் கடந்து கோயில் உலாவை நிறைவு செய்யலாம்.

Tags : Madurai Meenakshi ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...